TNPSC Syllabus Change | டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்... எதிர்க்கும் தேர்வர்கள்; வலுக்கும் கோரிக்கைகள்!
டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 2 ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி வந்த தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 2 ஆண்டுகளாகத் தேர்வுக்குத் தயாராகி வந்த தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தேர்வாவது கட்டாயம். அதன்படி, முதல்நிலைத் தேர்வில் கொள்குறி வகையில் 200 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
அதாவது, 10-ம் வகுப்புத் தரத்தில் பொதுத் தமிழ் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும், பொது அறிவுக் கேள்விகள் 75 மதிப்பெண்களுக்கும் கணிதக் கேள்விகள் 25 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். ஆங்கில வழியில் படிப்போருக்கு, பொதுத் தமிழுக்குப் பதிலாக பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் 2021-ம் ஆண்டில் இருந்து தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாகப்பட்ட நிலையில், முதன்மைத் தேர்வில் முதல் தாளாக தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில், தேர்ச்சி பெறுவோரின் முதன்மைத் தேர்வுத் தாள்கள் மட்டுமே திருத்தப்படும்.
தமிழ் மொழி தகுதித் தேர்வில்,
1.தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்கக் குறிப்பில் இருந்து விவரித்து எழுதுதல்
5. திருக்குறளில் இருந்து கட்டுரை எழுதுதல்,
6. கடிதம் எழுதுதல் (அலுவல் சார்ந்து)
7. தமிழ் மொழியில் அறிவு
ஆகியவற்றில் இருந்து 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். முதல் தாள் தகுதித்தேர்வாக மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டு, இந்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது. இதனால் வெளிமாநிலத்தவர் பயிற்சி பெற்று வெற்றி வரவும் வாய்ப்புள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2-ம் தாளுக்கு மட்டுமே மதிப்பெண்கள்
அதேநேரத்தில் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும். எனினும் தாள் II-ல் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இரண்டாம் தாளில், பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவுத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக எழுதும் வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம்.
2 ஆண்டுகளாகப் படித்தது வீணா?
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கு முந்தைய பாடத்திட்டம் திடீரென மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் 2 ஆண்டுகளாக இரவு பகலாகப் படித்து, தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போட்டித் தேர்வு பயிற்சியாளரும் ஐயாச்சாமி ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான ஐயாச்சாமி, ’ஏபிபி’ நிறுவனத்திடம் கூறும்போது, ''தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற வகையில், தகுதித்தேர்வு வைக்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் சேர்க்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஒன்று.
இதுநாள் வரை 2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தைத்தான் தேர்வர்கள் படித்து வந்தனர். அதன்படி 200 கேள்விகளில் 175 மதிப்பெண்கள் பொது அறிவு சார்ந்தும், 25 மதிப்பெண்கள் கணிதம் சார்ந்தும் அறிமுகப்படுத்தப்பட்டது. பொது அறிவு சார்ந்து புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட்டன.
அலகு 8-ல் தமிழக வரலாறு மற்றும் பண்பாடு என்ற பாடத்தில் தமிழக இலக்கியங்கள், திருக்குறள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டன. அலகு 9-ல் வளர்ச்சி நிர்வாகம் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் தேர்வர்கள் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு, சமூக நீதி, தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள் குறித்துப் படித்தனர். இதே பாடத்திட்டம் முதன்மைத் தேர்வுக்குமானதாக இருந்தது. கொரோனா காரணமாகத் தேர்வுகள் தள்ளிப்போயின. தற்போது 2021-ல் பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டம் அரசு ஊழியர்களாகத் தேர்ச்சி பெறுவோருக்குப் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்காது.
திருக்குறளுக்கு இல்லாத முக்கியத்துவம்
முதன்மைத் தேர்வில் நடத்தப்படும் தகுதித் தேர்வில், பெயருக்குத் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு கட்டுரை மட்டுமே கேட்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற சூழலில், திருக்குறளைப் படிக்காமலேயே ஒருவரால் தேர்ச்சி பெற முடியும்.
தமிழில் போதிய புத்தகங்கள் இல்லை
பாடத்திட்ட மாற்றத்தால் தமிழ், ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும் தேர்வெழுதுவோர் சிரமத்துக்கு ஆளாவர். தமிழ் வழியில் எழுதுவோர், முதல்நிலைத் தேர்வு, முதன்மை தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும் முதன்மைத் தேர்வு 2-ம் தாளில் சிரமத்துக்கு ஆளாவர். ஏனெனில் இப்போதைய பாடத்திட்டத்துக்குத் தமிழ் வழியில் படிக்கப் போதிய புத்தகங்கள் இல்லை. இதனால் அவர்களின் மதிப்பெண்கள் குறையலாம். தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் கேட்கும் பதவிகள் கிடைக்காது.
அதேபோல ஆங்கில வழியில் படிப்போரால் முதன்மைத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதாக இருக்காது. பொது ஆங்கிலம் தொடர்பான பாடத்திட்டத்துக்கான நூல்களும் தற்போது வெளியான புத்தகங்கள் அல்ல. 2008-ல் வெளியான புத்தகத்தைத்தான் அவர்கள் படிக்க வேண்டி உள்ளது.
பின்னோக்கிச் செல்லும் பாடத்திட்டம்
முதன்மைத் தேர்வில் உள்ள பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலப் பாடத்திட்டம், தேர்வாவோரின் வேலைக்கு எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்காது. அதேபோல இந்தப் பாடங்களைப் படிக்கத் தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கும். இது பின்னோக்கிச் செல்வதாகவே அமையும். மொத்தத்தில் பாடத்திட்ட மாற்றம் என்ற பெயரில் பழைய பாடத்திட்டமே மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுத்தமிழ் / பொது ஆங்கிலப் பாடத்திட்டத்துக்கு பதிலாக, முந்தைய 2019 பாடத்திட்டமான தமிழக வரலாறு, பண்பாடு, மதிய உணவுத் திட்டம், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கிய பாடத்திட்டங்களைப் படித்து, அதற்கான புரிதலோடு தேர்வர்கள் வருவது சிறப்பாக இருக்கும். அதேபோலத் திருக்குறள் தகுதித் தேர்வில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திருக்குறளை மதிப்பீட்டுத் தேர்வில் சேர்க்க வேண்டும்'' என்று ஐயாச்சாமி தெரிவித்தார்.
TN Govt Jobs | தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தாலே அரசுப்பணியா?அரசாணை சொல்வது என்ன? முழு விவரம்!