TNPSC Result Schedule: தாமதமாகும் குரூப் 1 தேர்வு முடிவுகள்; 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு!
முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எனினும் தேர்வு முடிவுகள் தாமதமாகி வந்தன.
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல், மேலும் 15 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உயர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர்.
5 மாதங்களுக்குப் பிறகு குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகின. தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன.
பிப்ரவரி மாதம் வெளியாகும்
தொடர்ந்து முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எனினும் தேர்வு முடிவுகள் தாமதமாகி வந்தன. இந்த நிலையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல், மேலும் 15 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பிற தேர்வு முடிவுகள் எப்போது?
ஏற்கெனவே அறிவித்தபடி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகள் ஜனவரி 12ஆம்தேதி வெளியாக உள்ளன. அதேபோல 10 பணியிடங்களுக்கான குரூப் 6 தேர்வு (தமிழ்நாடு வனத்துறை துணை வனப் பயிற்சியாளர் பணி- Forest Apprentice in Tamil Nadu Forest Subordinate Service (Group-VI Services)) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான நிலையில், வாய்மொழித் தேர்வு பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியான நிலையில், தேர்வு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
11 பணியிடங்களைக் கொண்ட குரூப் - I சி பணிக்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளன. இந்தத் தேர்வு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று இருந்தது.
வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவை
கிராமப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாலை ஆய்வாளர் (Road Inspector) பணிக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 894 பணி இடங்களுக்கான தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நீதித் துறை சார்பில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்று இருந்தது. குறிப்பாக 245 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 29ஆம் தேதியும் முதன்மைத் தேர்வு டிசம்பர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதமே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை தவிர பிற தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
முழு அட்டவணையைக் காண https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf