TNEA Rank List 2022: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறையா? 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கலையா?- உதவி எண் அறிவிப்பு; கடைசி தேதி இதுதான்!
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை இருந்தாலோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விடுபட்டிருந்தாலோ தொடர்புகொள்ள அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை இருந்தாலோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விடுபட்டிருந்தாலோ தொடர்புகொள்ள அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசித் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஒரே மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்குவதற்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையில் கூடுதலாக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி +2 வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் 10ஆம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றினை எடுத்துக்கொள்வதால், சமவாய்ப்பு எண்ணின் பயன்பாடு குறைந்து, இந்த வருடம் ஒரு மாணாக்கர் கூட சமவாய்ப்பு எண்ணைப் (ரேண்டம் எண் ) பயன்படுத்தவில்லை.
மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் நான்கு நாட்களுக்குள் (19.08.2022 க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் ஆராயப்பட்டு அவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்தில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 19.08.2022-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
குறைகளை நிவர்த்தி செய்ய மாணாக்கர்கள் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி (1800- 425-0110) வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு
முன்னதாக 2,11,905 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். அதில், 1,69,080 பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இதில் 1,58,157 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10,923 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு தனியாக 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 22,587 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.
1,48,811 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/Academic_Rank.pdf?t=1660629396774
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்