TNCMTSE: பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம்; முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
TNCMTSE Exam 2024: பள்ளி மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஜூலை 3 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை
முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வின் மூலம் 500 மாணவர்கள், 500 மாணவியர்கள் என 1000 மாணவர்கள் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். குறிப்பாக மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு மட்டும் அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை ஜூலை 3 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஜூலை 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு”விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024- 2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த விவரத்தினை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1718083442.pdf க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://apply1.tndge.org/dge-notification/TCMTSE