(Source: Poll of Polls)
TN TRB Hall Ticket 2025: திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
PG TRB Hall Ticket Download 2025: தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், டிஆர்பி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் அதை அக்டோபர் 9ஆம் தேதி வரை சரிசெய்யலாம் என்றுஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியான ஹால் டிக்கெட்
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025, நாள் 10.07.2025-ன் அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) 30.09.2025 அன்று வெளியிடப்பட்டது.
இதில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு" (Hall Ticket) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 07.10.2025 முதல் 09.10.2025 மாலை 05.00 மணிவரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவுலகத்தில் நேரிடையாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வை ஒத்திவைக்க வலுக்கும் கோரிக்கை!
தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் கூறி, தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. எனினும் திட்டமிட்டபடி முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, குறைதீர்ப்பு மைய விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/






















