’’மாணவர்கள் விரும்பும் வகையில் பாடத்திட்டம்’’ அசத்தும் பள்ளிக் கல்வித்துறை- பொதுமக்கள் கருத்து கூறலாம்
பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டம் 21ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை பெறும் வகையில் உருவாக்க வேண்டும். மாணவர்களின் வயதுக்கேற்ற வகையிலும், மாணவர்கள் விரும்பும் வகையிலும் அமைய வேண்டும்.

தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன்படி 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை மாற்றியமைத்தல் பணியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர்குழு உறுப்பினர்களுக்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் 24.11.2025 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கலைத்திட்ட உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 11.12.2025 அன்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
பொதுமக்கள் கருத்துக் கேட்பு
இதன் தொடர்ச்சியாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வரைவுப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்காக இணையதளத்தில் 06.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இப்பாடத்திட்டங்களுக்கான பின்னூட்டங்கள் மற்றும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தினை உருவாக்குதல் சார்ந்த கருத்துகளையும் பங்கேற்பாளர்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதற்கு மண்டல அளவில் 38 மாவட்டங்களை 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட ( சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு) சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள சீமெட் கூட்ட அரங்கில் 10.01.2026 அன்று கூட்டம் நடைபெற்றது.
திறன்களை பெறும் வகையில் பாடத்திட்டம்
இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தரமோகன் பேசும்போது, பள்ளிக் கல்வித்துறை கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் 21ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை பெறும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும், மாணவர்களின் வயதுக்கேற்ற வகையிலும், மாணவர்கள் விரும்பும் வகையிலும் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். கலைத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பாடத்திட்டம் உருவாக்கிடும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், கலைத்திட்ட வடிவமைப்பு குழு உறுப்பினர்களான உமா ராமன், சந்தனதேவன், மணியம் செல்வன் அலுவல் சாரா உறுப்பினர்களான ந.லதா, இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், முனைவர் பூ.ஆ. நரேஷ், இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சசிகலா, இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த இணை இயக்குநர்கள் மற்றும் 4 மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அலுவலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆக மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். இக்கருத்துகள் அனைத்தும் பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்போது பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















