TN School Reopen: பள்ளிகள் திறந்ததும் செய்யவேண்டியது என்ன? பறந்த 3 உத்தரவு- என்னென்ன?
பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் வழி தகவல் அளிக்கும் திட்டம், போதை மருந்துகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது, கைகளில் வண்ண கயிறுகள் அணியத் தடை உள்ளிட்ட 3 திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன.
2024- 25ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே, 3 உத்தரவுகள் புதிதாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் வழி தகவல் அளிக்கும் திட்டம், போதை மருந்துகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது, கைகளில் வண்ண கயிறுகள் அணியத் தடை உள்ளிட்ட 3 திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன.
2024- 25ஆம் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறப்பு எப்போது?
முன்னதாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று (மே 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமர குருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?
அதில், ’’ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஜூன் 7 வெள்ளிக் கிழமை வருவதாலும் அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை அதாவது ஜூன் 10ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளையும் திறக்கலாம்’’ என பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே 3 உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
என்னென்ன உத்தரவுகள்?
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சுமார் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களை ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் வாட்ஸப் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்களின் மொபைல் எண்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு வருகின்றன. மொத்த எண்களும் பெறப்பட்டு, மாணவர்களின் தினசரி செயல்பாடுகள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட உள்ளன.
போதைப் பொருளை ஒழிக்கத் திட்டம்
பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்த நிலையில், பள்ளிகளில் போதைப் பழக்கத்தை ஒழிக்க புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல பள்ளிகளில் சாதி அடிப்படையில் மாணவர்கள் வண்ணக் கயிறு அணிந்து வந்த சம்பவங்களும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களும் கடந்த காலங்களில் நடைபெற்றன. ஏற்கெனவே மாணவர்கள் பள்ளிகளுக்கு வண்ணக் கயிறுகள் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் முழுமையாக வண்ணக் கயிறுகளைத் தடுக்கும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.