அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: புது முறையை அறிமுகம் செய்த கல்வித்துறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது. தேர்வு நியமனத்தில் புதிதாக எழுத்துத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின.
நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது.
முன்னதாக ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எழுத்துத் தேர்வை அறிமுகம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக எழுத்துத் தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது காலியாக உள்ள 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களும் எழுத்துத் தேர்வை எழுதலாம். அவர்கள் பணிக் காலத்துக்கு ஏற்றவாறு மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ஓராண்டிற்கு 2 மதிப்பெண்கள் விதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
2019-ல் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை
இதற்கிடையே 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவுக்கு, 2019-ல் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்த நியமனத்துக்கு அவர்களின் விண்ணப்பங்களும் கருத்தில் கொள்ளப்படும்.
பள்ளிகளுக்கும் எழுத்துத் தேர்வு கட்டாயம்
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Ramadoss: 78% அரசுப்பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்கள்; நம்பிக்கை ஏற்படுத்த வேண்டாமா?- ராமதாஸ்