TN Engineering Rank List: வெளியான பொறியியல் தரவரிசை பட்டியல்; 1.87 லட்சம் மாணவர்கள் பார்ப்பது எப்படி?
TNEA Rank List 2023: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிட்டார். மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
பொறியியல் கலந்தாய்வு
தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
2023 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பட்டப் படிப்புகளில் சேர, கடந்த மே 5ம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்தனர். இதில், 2,29,167 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்து, அவற்றில் 1,87,693 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.
அதிகரித்த விண்ணப்பப் பதிவு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ், இந்த ஆண்டு 7,852 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்தனர். 31,448 பேர் இந்த ஆண்டு 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து 394 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விளையாட்டு வீரர்களிடம் 5,024 விண்ணப்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளிடம் இருந்து 1,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு வழங்கும் உதவித் தொகை, வசதி ஆகியவற்றால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூன் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் சான்றிதழ்கள் வருகிற 20-ந் தேதி வரை சரிபார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (26-ம் தேதி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை தொடர்பாக புகார்களைத் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளிப்போகும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசை வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் 405 பேர் வெளிமாநில மாணவர்கள் ஆவர். 1,57,661 மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்திருக்கின்றனர். அதேபோல 20,084 பேர் மத்தியப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஆவர். 830 பேர் மற்ற மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் ஆவர்.
மாணவர்கள் https://static.tneaonline.org/docs/Academic_Rank_List.pdf?t=1687764500997 என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொது தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலைப் பார்க்க https://static.tneaonline.org/docs/Govt_Academic_Rank_List.pdf?t=1687764500997 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
கூடுதல் விவரங்களுக்கு:
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com