TN 12th Public Exam Result: பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு; பார்ப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை நாளை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை நாளை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆப்செண்ட்:
மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர். இதற்கிடையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை என்றும் தகவல் கசிந்தது. அதைத் தொடர்ந்து இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்றும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை நாளை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
நடைபெற்று முடிந்த மார்ச்/ ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுதி, மறு கூட்டல் (Re-total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் நாளை (14.06.2023 -புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்து, மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம். இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப் படுகிறது.
மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.