“ஐஏஎஸ் ஆவதற்கு பயிற்சி மையம் எதற்கு? திண்ணை போதும்” - ஐஏஎஸ் இறையன்புவின் சகோதரர் திருப்புகழ்!
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் சகோதரர் திருப்புகழ் ஐஏஎஸ். இவர் தான் ஐஏஎஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் சகோதரர் திருப்புகழ் ஐஏஎஸ். இவர் தான் ஐஏஎஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியிலிருந்து..
எங்கள் ஊர் சேலம். எங்கள் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அப்பாவும் அம்மாவும் எனக்கும் தம்பிக்கும் ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, உள்ளதைக் கொண்டு நல்லது செய் போன்ற பண்புகளை சொத்தாகக் கொடுத்தனர். நாங்கள் அதன் வழி நின்றோம். கர்நாடக கச்சேரி மேடைகளில் தம்புரா ஒலிப்பதுபோல் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்த நற்பண்புகள் எங்களின் வாழ்க்கையில் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அப்பா ஒரு சிறந்த மனிதர். மனிதர்களை மதிக்கத் தெரிந்த மனிதர். அவரிடமிருந்து நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம். சிறு வயதில் எனக்கு ஐஏஎஸ் கனவெல்லாம் கிடையாது. 17 வயதிலேயே ஓஷோ ரஜ்னீஸ் படித்தேன். ஜெ.கிருஷ்ணமூர்த்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அப்போது என் தம்பி இறையன்பு கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பை முடித்துவிட்டு அவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆனார். வீட்டில் எல்லோருக்கும் பெரும்மகிழ்ச்சி.
எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் அவர் படிப்பார். எந்த பயிற்சி மையத்துக்கும் அவர் செல்லவில்லை. அவரைப் பார்த்து சிவில் சர்வீஸ் மீது எனக்கும் ஈர்ப்பு வந்தது. ஏற்கெனவே அவர் எழுதியிருந்ததால் நானும் எழுதலாம் என்று எழுத முயற்சித்தேன் ஆனால் எனக்கு வயதில்லை. அந்த ஆசையை விட்டுவிட்டேன். வங்கியில் அதிகாரியாக வேலை இருந்ததால் அதில் நாட்டம் செலுத்திவந்தேன். அப்போது வி.பி.சிங் அரசு மத்தியில் அமைந்தது. அந்த அரசு ஐஏஎஸ் தேர்வு எழுத இரண்டாண்டுகள் வயது வரம்பை தளர்த்தியது. 30 வயது வரை எழுதலாம் என்றது. இதனால் நான் மீண்டும் விண்ணப்பித்தேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சியில் ஒரு அறை எடுத்து தயாரானேன். தமிழகத்தில் முதல் இடத்திலும், ஆல் இந்தியா அளவில் 24ஆம் இடத்திலும் வெற்றி பெற்றேன். ஆகையால் பயிற்சி மையத்தில் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
என் வாழ்க்கையில் நான் இரண்டு கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஒன்று, தனிப்பட்ட வெற்றி என்ற எதுவும் இல்லை. சமுதாய பங்களிப்பு இல்லாமல் யாரும் எதையும் சாதிக்க முடியாது. நான் என்ற அகந்தையை விட்டுவிட வேண்டும். நாம் என்ன சாதித்தாலும் அதற்கு இந்த சமுதாயத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
இன்னொரு தத்துவம் ஒரு ஜென் துறவி உணர்த்தியது. அந்தத் துறவி தன் தத்துவங்களை எல்லாம் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அதை புத்தகமாக பிரசுரம் செய்ய பணம் சேர்த்துவைத்துள்ளார். அதை அச்சிடலாம் என நினைக்கும்போது அவரது கிராமத்தில் பஞ்சம் வருகிறது. கிராமத்தின் நிவாரணத்துக்காக பணத்தை கொடுத்துவிடுகிறார். இரண்டாவதாக மீண்டும் பணம் சேர்க்கிறார். மீண்டும் புத்தகத்தை அச்சிடச் செல்லும்போது ஊரில் வெள்ளம் வந்துவிடுகிறது. பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்து விடுகிறார். மூன்றாவது முறையாக அவர் புத்தகத்தை அச்சிட்டுவிடுகிறார். அப்போது அவர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் இந்தப் புத்தகத்தை ஏற்கெனவே இரண்டு எடிசன் பதிப்பித்துவிட்டேன். அந்த இரண்டும் இதைவிட சிறப்பானவை என்றார். தத்துவம் என்பது புத்தகத்தில் அச்சிடுவது இல்லை. அது வாழ்க்கையில் பிறருக்கு உதவுவதை கொள்கையாகக் கொள்வது. அதுதான் ஆன்மீகம். அதுதான் சமையம், அதுதான் மனிதம்.