10th Exam 2024: இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கட்டுப்பாடுகள் என்னென்ன?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (26 மார்ச்) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
9 லட்சம் மாணவர்கள்:
இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.
முன்னதாக தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் (மார்ச் 25ஆம் தேதி) நிறைவடைந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி:
பொது தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க அறை கண்காணிப்பாளர்கள் 48,700 பேர் ஈடுபட்டுள்ளனர். 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை மின்சாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.