உயர் கல்விக்கு மையப்புள்ளியாக மாறிய தொலைதூரக் கல்வி: லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், பழங்குடி இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை தொலைதூரக் கல்வி மாற்றி அமைத்துள்ளது.

தஞ்சாவூர்: அஞ்சல் வழிக் கல்வி முதல் இன்றைய ஆன்லைன் வகுப்புகள் வரை தொலைதூரக் கல்வியில் இந்தியாவில் பின்தங்கியோருக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இது உயர் கல்விக்கு ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
இன்று, “டிஜிட்டல் இந்தியா” என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் வேளையில், இந்தியாவில் பல ஆண்டுகளாக ஒரு அமைதியான ஆனால் சக்திவாய்ந்த புரட்சி நடந்து கொண்டேதான் வந்துள்ளது. அதுதான் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி (Open and Distance Learning - ODL). ஒரு காலத்தில் பாரம்பரிய பல்கலைக்கழகங்களில் சேர முடியாதவர்களுக்கான 'இரண்டாம் தர' தேர்வாகப் பார்க்கப்பட்டது இந்த தொலைதூரக் கல்வி. இப்போது உயர் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான மையத் தூணாக மாறியுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், பழங்குடி இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை தொலைதூரக் கல்வி மாற்றி அமைத்துள்ளது.
1960-களில், பாரம்பரிய பல்கலைக்கழகங்கள் குறைந்த எண்ணிக்கையிலும், நகர்ப்புறங்களை மையப்படுத்தியும் இருந்ததால், உயர்கல்வி தேவை அதிகரித்து இளைஞர்களைச் சேர்ப்பதில் சிக்கல் இருந்தது. இந்த நெருக்கடியைத் தீர்க்கும் விதமாக டெல்லி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்கள் அஞ்சல் வழிக் கல்வித் (Correspondence Courses) திட்டங்களைத் தொடங்கின. முதன்முறையாக, வளாகத்திற்குச் செல்லாமல் பட்டம் பெறும் கனவு சாத்தியமானது. இதைத் தொடர்ந்து, 1982-ல் ஆந்திரப் பிரதேச திறந்தவெளி பல்கலைக்கழகம் (Dr BR Ambedkar Open University) இந்தியாவின் முதல் முழு திறந்தவெளி பல்கலைக்கழகமாக உருவானது. பின்னர், 1985-ல் தொடங்கப்பட்ட இந்திரா காந்தி தேசியத் திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU), அஞ்சல் வழிக் கல்வி, வானொலி ஒளிபரப்புகள் மற்றும் பிராந்திய ஆய்வு மையங்கள் மூலம் தொலைதூரக் கல்விக்கு ஒரு பொற்காலத்தை அமைத்தது. ஆயிரக்கணக்கானோரின் கல்வி வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைந்தது.
தொலைதூரக் கல்வியின் உண்மையான கதை வெறும் கொள்கைகள் அல்லது நிறுவனங்களில் எழுதப்படவில்லை; அது கற்கும் மாணவர்களின் வாழ்க்கையில் எழுதப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான உழைக்கும் பெரியவர்கள் வேலையை விடாமல் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவியுள்ளது. திருமணத்தின் காரணமாக படிப்பை இடையில் விட்ட பெண்களுக்கு இது ஒரு இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு உயர்கல்வியைத் தங்கள் மாவட்டத்திலேயே பெற உதவியுள்ளது.
2000-களுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் SWAYAM, NPTEL போன்ற அரசு தளங்களின் வருகையால், தொலைதூரக் கல்வியானது ஆன்லைன் கற்றலுடன் இணைந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020 கலப்பு கற்றல் மற்றும் ஆன்லைன் கற்றலை முக்கிய நீரோட்டமாகக் கருதி, 2035-க்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50% ஆக உயர்த்த ODL இன்றியமையாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. இருப்பினும், சவால்கள் தொடர்கின்றன. இணைய வசதி இல்லாமை, சாதனங்கள் பற்றாக்குறை ஆகியவை கிராமப்புற மாணவர்களையும், பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும் (PwD) இன்னும் பாதிக்கின்றன. மேலும், தனியார் துறையில் உள்ள சிலர் இன்னும் ODL பட்டங்களின் தரம் குறித்து சந்தேகம் கொள்கின்றனர்.
இந்த சவால்களை எதிர்கொள்வதே தொலைதூரக் கல்வியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியம். கிராமப்புற இணைப்பை விரிவுபடுத்துதல், குறைந்த விலையில் சாதனங்களை வழங்குதல், பிராந்திய மொழிகளில் உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கற்பித்தலில் பயிற்சி அளித்தல் ஆகியவை முக்கிய சீர்திருத்தங்கள் ஆகும். இந்தியாவில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி என்பது கல்வியின் ஜனநாயக உணர்வை நிலைநிறுத்துகிறது, கற்றல் ஒரு சிலரின் சலுகை அல்ல, அனைவரின் பிறப்புரிமை என்பதை நிரூபிக்கும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















