History Textbooks: ‛பாடப் புத்தகங்களில் வரலாறு மாற்றி எழுத வேண்டும்’ -தேசியப் பாடத்திட்டக் குழு உறுப்பினர் கருத்து!
தாய் நாட்டிற்காக போராடியவர்களின் வீரமும், தீரமும் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும், தோல்விகள் அல்ல - தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா
தற்போதைய பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்திய வரலாறு சரியாக பிரதிநிதித்துவ படவில்லை என தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் (National Book Trust) கோவிந்த் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளதார்.
தாய் நாட்டுக்காக தியாகம் செய்த எண்ணற்ற ஆளுமைகள் பல்வேறு காரணங்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தாய் நாட்டிற்காக போராடியவர்களின் வீரமும், தீரமும் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். புதிய உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்றும் கூறினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கல்வி பிரிவான வித்யா பாரதி அமைப்பின் முன்னாள் தலைவராகவும், தற்போது தேசிய செயல் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரை, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழுவின் உறுப்பினராக மத்திய கல்வி அமைச்சாகம் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நியமித்தது.
Secretary, Deptt School Education and officials of department and NCERT had interaction with members regarding provisions of NEP 2020 and expectations from NCF. pic.twitter.com/NR2i1vK591
— Ministry of Education (@EduMinOfIndia) October 12, 2021
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான இக்குழுவில் கல்வித்துறை நிபுணர்களான என் ஐ இ பி ஏ வேந்தர் மகேஷ் சந்திர பந்த், தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நஜ்மா அக்தர், ஆந்திரப்பிரதேச மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் டி வி கட்டிமணி, பிரான்சு நாட்டைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மைக்கேல் டானினோ, ஜம்மு ஐஐஎம் தலைவர் மிலிந்த் கும்ப்ளே, பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் (டாக்டர்) ஜக்பீர் சிங், கணிதவியல் நிபுணர் மஞ்சுள் பார்கவா, சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான எம் கே ஸ்ரீதர், எல் எல் எஃப் நிறுவன இயக்குநர் தீர் ஜிங்க்ரன், ஏக்ஸ்டெப் ஃபௌண்டேசன் தலைமைச் செயல் அதிகாரி சங்கர் மருவாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Chairman of National Steering Committee Dr Kasturirangan chaired the first meeting for developing the National Curriculum Framework. pic.twitter.com/LCLdNsasmr
— Ministry of Education (@EduMinOfIndia) October 12, 2021
இக்குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்றைய முன்தினம் (அக்டோபர் 12ம் தேதி) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளையும் மையமாகக் கொண்ட தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகள் விவாதிக்கப்பட்டதாகவும், மத்திய கல்வித்துறைச் செயலாளர், என்சிஇஆர்டி அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழிடம் பேசிய சர்மா, “ பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடங்களில், இந்திய ஆட்சியாளர்கள் இங்கே தோற்றார்கள், அங்கே இழந்தார்கள் என்பது மட்டுமே பேசுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு படையெடுப்பாளர்களின் தாக்குதல்களையும் கொடுமைகளையும் விரட்டியடித்த போராட்டங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். தாய் நாட்டிற்காக போராடியவர்களின் வீரமும், தீரமும் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
முகலாயப் பேராசிரியரான அக்பர், மகாராணா பிரதாப்பை தோற்கடித்தார் என்ற கதை கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சண்டையிட்டதில்லை. எனவே, புதிய உண்மைகளின் வெளிச்சத்தில், வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும். (அல்லது) பாடப்புத்தகங்களில் புதிய உண்மைகள் சேர்க்கப்பட வேண்டும். பாரம்பரியமான பண்டைய வேதக் கணித முறை போன்ற வரலாற்று அறிவியலை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய பெருமையை வளர்க்க உதவ வேண்டும் என்றும் கூறினார்.
தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தேசிய வழிநடத்தும் குழு:
தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அம்சங்களின் படி, நான்கு தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை இக்குழு உருவாக்கும் - பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, ஆரம்பகாலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம், ஆசிரியர் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் வயது வந்தோர் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட அமைப்பு.
பாடத்திட்டச் சீர்திருத்தங்களை முன்மொழிய இந்த நான்கு பகுதிகளுடன் தொடர்புடைய தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அனைத்துப் பரிந்துரைகளையும் மையமாகக் கொண்டு பள்ளிக் கல்வி, ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), ஆசிரியர் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை இந்தக் குழு விவாதிக்கும்.
தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பிற்கான தொழில்நுட்பத் தளத்தில் பெறப்பட்ட மாநிலப் பாடத்திட்டக் கட்டமைப்பிலிருந்து உள்ளீடுகளை இந்தக் குழு ஈர்க்கும்.
பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து, அதாவது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் என் சி இ ஆர் டி மற்றும் கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுவின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகளைச் சேர்த்த பிறகு, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை இந்தக் குழு இறுதி செய்யும்.