10-வது நாளாக நீடிக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரப் போராட்டம்: "பணி நிரந்தரம் மட்டுமே தீர்வு" - ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆவேசம்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ன் படி, 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வரும் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என ஆசிரியர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் மல்க தொடரும் போராட்டம்: ஆசிரியர் பலி
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர், "எப்போதுதான் முதல்வர் எங்களை நிரந்தரம் செய்வார்?" என்ற கடும் மன உளைச்சலில் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
ஒரு ஆசிரியர் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட பின்னரும், தமிழக அரசோ அல்லது முதலமைச்சரோ உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையோ, அவரது மனைவிக்கு அரசு வேலையோ அறிவிக்காதது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. இதனிடையே, மறைந்த ஆசிரியர் கண்ணனின் மகனின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் (IJK) நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்துள்ளனர். அரசின் கடமையை ஒரு வேறு ஒரு கட்சி தலைவர் செய்வது பாராட்டத்தக்கது என்றாலும், முதல்வர் இன்னும் மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாகப் போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
"அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு"
போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்த ரூ. 2,500 சம்பள உயர்வு என்பது வெறும் "கண்துடைப்பு நாடகம்" எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:
"எங்களுக்குத் தேவை சொற்ப சம்பள உயர்வு அல்ல; பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் 'பணி நிரந்தரம்' மட்டுமே. பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றும் வேலையை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். 2012 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த அதே ஸ்டாலின், இன்று முதல்வரான பின் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?"
வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றனவா?
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இடங்களில் பகுதிநேர ஆசிரியர்களைக் குறிப்பிடிருந்தது,
* வாக்குறுதி 181: பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
* வாக்குறுதி 153: 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் (தற்போது இவர்கள் 15 ஆண்டுகள் பணி முடித்துள்ளனர்).
* வாக்குறுதி 377: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை பகுதிகளில் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும்.
ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையிலும், இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
நிதிச்சுமை ஒரு காரணமா?
தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகைக்காக 35,000 கோடி ரூபாயும், பொங்கல் போனஸிற்காக 7,000 கோடி ரூபாயும் ஒதுக்கும்போது, சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வை மேம்படுத்த வெறும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி காலமுறை ஊதியம் வழங்குவது ஒன்றும் இயலாத காரியம் அல்ல என்று ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.
இறுதி எச்சரிக்கை
"தினமும் எங்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைப்பதன் மூலம் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என்று முதல்வர் நினைக்க வேண்டாம். இது கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நேரம். எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இன்றி, ஏற்கனவே அளித்த வாக்குறுதியை அரசாணையாக வெளியிட்டாலே போதும். பணி நிரந்தரம் என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே 12,000 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும்," எனச் செந்தில்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
10 நாட்களாகியும் நீடிக்கும் இந்தப் போராட்டத்தால் தமிழகக் கல்வித் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் தலையிட்டு சுமுக முடிவு எடுப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















