TNGAS Admission 2024: மாணவர்களே ஸ்வீட் நியூஸ்! அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - விபரம் உள்ளே!
TNGAS Admission 2024: தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசின் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசின் 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றது. இந்த கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்கள் உள்ளது. தமிழ்நாடு அரசு நடத்தும் கலை அறிவியல் கல்லூரிகள் 140 துறைகளுக்கான இளங்கலைப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றது. இதன் அடிப்படையில், கடந்த 6ஆம் தேதியில் இருந்து இன்றுவரை மாணவர்கள் இளங்கலைப் படிப்புகளில் இணைந்து படிக்க, விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுவந்தது. இன்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இளங்கலை படிப்புகளில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ஆம் தேதி வரை இணையத்தில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கூடுதலாக நான்கு நாட்கள் கிடைத்துள்ளதால், மாணவர்கள் தங்களது விருப்பமான துறைகளில் விண்ணப்பங்களைச் சமர்பிக்க ஏதுவாக இருக்கும் என கல்வியலாளர்கள் மத்தியில் கூறப்படுகின்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் தொடங்கியது. இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதிநாள் 20/05/2024 ஆக இருந்தது. இன்னும் அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்ய ஏதுவாக, இணையவழி விண்ணப்பம் செய்ய இறுதிநாள் 24/05/2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.