11th Result District Wise: வெளியானது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் முதலிடம்... எது கடைசி... முழு விவரம்!
TN 11th Results 2023 District Wise Pass Percentage: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
TN 11th Results 2023 District Wise Pass Percentage: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
வெளியானது தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி, மாநிலம் முழுவதும் 90.93% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவியர் 94.36% அளவிற்கும், மாணவர்கள் 86.99% அளவிற்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37% அளவிற்கு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள்:
மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் 96.18 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் 2வது இடத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம் 95.73% தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், நாமக்கல் மாவட்டம் 95.60% தேர்ச்சி விகிதத்துடன் நான்காவது இடத்திலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் 95.43% தேச்சி விகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. விருதுநகர் மாவட்டம் 95.19% தேர்ச்சியும், திருநெல்வேலி மாவட்டம் 95.08% தேர்ச்சியும் , அரியலூர் மாவட்டம் 94.93% தேர்ச்சியும், சிவகங்கை மாவட்டம் 94.85% தேர்ச்சியும் மற்றும் தென்காசி மாவட்டம் 94.14% தேர்ச்சியும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அரசு பள்ளிகளில் முதலிடம்:
அரசு பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதத்தில், திருப்பூரில் உள்ள 69 பள்ளிகளில் பயின்ற 94.33% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அதைதொடர்ந்து, ஈரோட்டில் 93.62 சதவிகிதம் அளவிற்கும், நாமக்கல்லில் 92.94 சதவிகிதம் அளவிற்கும், அரியலுரில் 92.31 சதவிகிதம் அளவிற்கும், சிவகங்கையில் 91.17 சதவிகிதம் அளவிற்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி வாரியாக விவரங்கள்:
மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 45 ஆயிரத்து 634 பேர் 11ம் வகுப்பு தேர்வுகளை எழுதினர். இதில், 2 லட்சத்து 93 ஆயிரத்து 676 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 41 ஆயிரத்து 596 பேர் 11ம் வகுப்பு தேர்வுகளை எழுதினர். இதில், 2 லட்சத்து 36 ஆயிரத்து 15 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி எழுதிய நிலையில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 722 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், இந்த மூன்று விதமான பள்ளிகளில் தனியார் பள்ளிகள் தான் அதிகபட்சமாக 97.69 சதவிகிதம் அளவிற்கு சராசரியாக 11ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.