10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் வெளியீடு! கால்குலேட்டருக்கு அனுமதி!
Tamil Nadu 10th 12th Practical Exam Date 2026: 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக, தெரிவித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது.
2026- 26 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணை குறித்த செய்திக் குறிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அண்மையில் வெளியிட்டது.
மார்ச் மாதம் தொடங்கும் பொதுத்தேர்வு; செய்முறைத் தேர்வு எப்போது?
இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3,317 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். செய்முறைத் தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11.03.2026 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். செய்முறைத் தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகளை 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
2026-இன்படி தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-26-ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு அரசாணை (நிலை) 6.228, பள்ளிக்கல்வித் (அ.தே) துறை, நாள்: 09.10.2026-இன்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026ஆம் ஆண்டு வரை மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெற உள்ளன.
கால்குலேட்டருக்கும் அனுமதி
மேலும் 2025-26 பொதுத்தேர்வு முதல் 12-ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















