SSC Website Down: 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள்; எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி!
மத்திய அரசில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய அரசில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.17) கடைசித் தேதியாக உள்ள நிலையில், விண்ணப்பிக்க வேண்டிய எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், எஸ்எஸ்சி எனப்படும் மத்திய ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
நாளையே கடைசி
இந்த நிலையில், எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு நாளை (பிப்ரவரி 17ஆம் தேதி) இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.
நேரடியாக சலான் முறையில் கட்டணம் செலுத்த பிப்ரவரி 20 கடைசித் தேதி ஆகும். விண்ணப்பப் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விண்ணப்பிக்க வேண்டிய எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், எஸ்எஸ்சி எனப்படும் மத்திய ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மதுரை தொகுதி மக்களவை எம்.பி.யான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு விண்ணப்பிக்கத் தேவையான இணையதளம் தற்போது வேலை செய்யவில்லை. அது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதற்காக, விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
காலிப் பணியிடங்கள்
பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் - 529 பணியிடங்கள்
இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. எம்டிஎஸ் தேர்வில், கடந்த 2021ஆம் ஆண்டு விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது.