SSC Reforms: எஸ்எஸ்சி தேர்வில் அதிரடி மாற்றங்கள்! குளறுபடிகள் நீங்க புது வழி- ஒரே ஷிஃப்ட், அருகில் தேர்வு மையங்கள்!
SSC Reforms: எஸ்எஸ்சி தேர்வில் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

எஸ்எஸ்சி எனப்படும் அதிகாரிகள் தேர்வு வாரியம் சார்பில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்ற தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள், கணினி கோளாறுகள், மவுஸ் பழுதுகள், ஆதார் சரிபார்ப்பில் தாமதம் மற்றும் தொலைதூர மைய ஒதுக்கீடுகள் போன்ற காரணங்களால் Staff Selection Commission கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. மாணவர்கள் காத்திரமான போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்தச் சூழலில், தேர்வர்களின் கவலைகளைப் போக்க எஸ்எஸ்சி பல திருத்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
இதுகுறித்து தனியார் நாளிதழுக்கு எஸ்எஸ்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது:
ஜூலை மாதம் முதல் தேர்வு செயல்முறையை மாற்றியமைத்ததால் சில குறைபாடுகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. அருகிலுள்ள மையங்கள், சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் சரியாக செயல்படும் கணினிகள் பற்றிய வேட்பாளர்களின் கவலைகள் நியாயமானவை.
புதிய இயல்பாக்குதல் சூத்திரம் (New Normalisation Formula)
எஸ்எஸ்சி மதிப்பெண்களை இயல்பாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. ஜூன் 2025 வரை, பழைய சூத்திரம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் ஜூலை முதல், எஸ்எஸ்சி ஒரு புதிய முறைக்கு மாறியுள்ளது. "இப்போது, இயல்பாக்குதல் ஷிப்ட் வாரியாக செய்யப்படும். ஒரு ஷிப்ட்டின் கேள்வித்தாள் கடினமாகவும், மற்றொரு ஷிப்ட்டின் கேள்வித்தாள் எளிதாகவும் இருந்தால், வேட்பாளர்கள் தங்கள் சொந்த ஷிப்ட்க்குள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்," என்று அவர் விளக்கினார். இறுதித் தேர்வு, அல்லது Tier 2 தேர்வு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒற்றை ஷிப்டில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெருக்கமாக தேர்வு மையங்கள்
தேர்வர்களுக்கு 500 கி.மீ தொலைவில் மையங்கள் ஒதுக்கப்பட்ட புகார்களுக்கு பதிலளித்த எஸ்எஸ்சி தலைவர், ’’புதிய தேர்வர்கள் போதுமான மையங்களைப் பெறுவதற்கு சிரமப்பட்டதால் இத்தகைய ஒதுக்கீடுகள் ஏற்பட்டன. இப்போது, 80% வேட்பாளர்கள் தங்கள் விருப்பப்படி மையங்களைப் பெறுகிறார்கள். இனி, இது 90%-க்கும் அதிகமாக உயரும். அதிகபட்ச தூரமும் 100 கி.மீ ஆக குறைக்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.
பேனா- காகித முறைக்கு திரும்பும் வாய்ப்பில்லை:
பேனா மற்றும் காகிதத் தேர்வுகளுக்குத் திரும்புவதற்கான சாத்தியம் குறித்து கேட்டபோது, கோபாலகிருஷ்ணன் அதை நிராகரித்தார். "எஸ்எஸ்சி தேர்வுகளை கோடிக்கணக்கான தேர்வர்கள் எழுதுகின்றனர். பேனா மற்றும் காகித முறைத் தேர்வு, வினாத்தாள் கசிவுகள், தாமதங்கள் மற்றும் முறைகேடுகள் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கும். ஆனால் இணைய வழித் தேர்வு, பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை உறுதி செய்கிறது.
புதிய தொழில்நுட்பத்துடன், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் மையங்களாகப் பயன்படுத்தலாம். கேள்வித் தாள்கள் தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே வழங்கப்படும்" என்றும் எஸ்எஸ்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.























