அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி: ஆசிரியர்களை அடையாளம் காண தேர்வு
4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஆசிரியர்களை அடையாளம் காணத் தேர்வு நடத்தப்பட உள்ளது
முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த சூழலில் எஸ்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக, ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியில் எஸ்சிஇஆர்டி ஈடுபட உள்ளது.
இதற்காக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் (DIET), முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைவரும் இணைந்து, தகுந்திவாய்ந்த ஆசிரியர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் DIET ஆங்கில ஆசிரியர்களாகவோ, ஆங்கில பி.டி. ஆசிரியர்களாகவோ, பிஆர்டிகளாகவோ இருக்கலாம். எனினும் அவர்கள் ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும் கற்பித்தல் பணியில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
அவர்களின் ஆங்கிலப் புலமையைத் தேர்வு செய்யும் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இது நாளை (22ஆம் தேதி) மதியம் 2 மணி வரையோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடத்தப்பட வேண்டும்.
ஆன்லைன் தேர்வை மதிப்பீடு செய்த பிறகு, 23ஆம் தேதி ஆங்கிலப் பயிற்சிக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாநில அளவில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி மே 30 மற்றும் 31ஆம் தேதி அன்று வழங்கப்படும். பிறகு அவர்கள் மாவட்டந்தோறும் ஆங்கிலப் பயிற்சியை அளிக்க வேண்டும்''.
இவ்வாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வுக்கான இணைப்பையும் எஸ்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்