(Source: ECI/ABP News/ABP Majha)
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி; ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள்- கலந்துகொள்வது எப்படி?
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 22.10.2024 அன்று நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 22.10.2024 அன்று நடைபெற உள்ளது.
எங்கே?
சென்னை மாவட்டத்தில்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வட சென்னை அளவில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென் சென்னை அளவில் இராணி மேரி கல்லூரியிலும் என 3 நிலைகளில் முற்பகல் 09.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
என்ன பரிசு?
இந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ. 2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
என்ன தலைப்பில் போட்டிகள்?
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு:
- காந்தியின் மதநல்லிணக்கம்,
- காந்தியைப் போல் நான்,
- கப்பலோட்டிய தமிழரும் காந்தியும்.
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு:
- அண்ணல் காந்தியடிகளின் உண்ணாநிலைப் போராட்டங்கள்,
- தமிழர்கள் கண்ட காந்தி
- காந்தியும் நேருவும்.
இவ்வாறு தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.