School Reopen Guidelines: விடுமுறை முடிந்து டிசம்பர் 11-இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
விடுமுறை முடிந்து வரும் 11ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உறுதிப்படுத்தி உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என 4 மாவட்டங்கள் வெள்ள நீரில் தத்தளித்தது. இது மட்டும் இல்லாமல் கடந்த 4ஆம் தேதியில் இருந்து இந்த நான்கு மாவட்டங்களுக்கு நாளை வரை அதாவது 8ஆம் தேதிவரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து வரும் 11ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே பள்ளி கல்லூரிகள் திறக்கும் முன் கல்வி நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
* பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்போது அவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கி தருவதை உறுதி செய்யவேண்டும்.
* பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். வளாகத்தில் முட்புதர்கள் இருப்பின் அவை அகற்றப்பட வேண்டும்.
* தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்படவேண்டும்.
* வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும் கட்டிட இடிபாடுகளையும் அகற்ற வேண்டும்.
* மழையின் காரணமாக பள்ளிகளில் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதோடு, அவற்றின் அருகில் மாணவர்கள் செல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
* பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும். மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருந்தால் அதனை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். தேவையென்றால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கலாம்.
* கட்டிடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்கிட தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது.
மேற்குறிப்பிட்டவாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.