Minister Anbil Mahesh: காலனி பெயரில் பள்ளி; நேரில் போய் பெயிண்ட் பூசி, பெயரை மாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
![Minister Anbil Mahesh: காலனி பெயரில் பள்ளி; நேரில் போய் பெயிண்ட் பூசி, பெயரை மாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ்! School named after Colony; Minister Anbil Mahesh went in person, painted it, and changed the name! Minister Anbil Mahesh: காலனி பெயரில் பள்ளி; நேரில் போய் பெயிண்ட் பூசி, பெயரை மாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/e9c5dc3e3cff1af02e28ff6654c268cb1732536162747332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காலனி என்ற பெயரைத் தாங்கி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த நிலையில், ஊர் பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்க, பள்ளியின் பெயரை மாற்றி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மனிதர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவிக் கொண்டேதான் இருக்கின்றன. ஏழை- பணக்காரன், ஆண்- பெண் என்ற பிரிவினையைத் தாண்டி சாதி முக்கியப் பங்காற்றி வருகிறது. திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பிறகு பெயர்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. சாதிப் பெயர்களைத் தாங்கிய தெருக்கள், சாலைகளின் பெயர்களும் மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் காலனி என்ற பெயரைத் தாங்கி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வந்த நிலையில், அந்தப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
பெயரினை அழித்து, அரசாணையை வழங்கினோம்
இந்த நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வெளியிட்டோம். தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினோம்.
இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம். ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகனிடம் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ - மு.க’’
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)