Periyar University Issue: பெரியார் பல்கலை. சர்ச்சை கேள்வி விவகாரம்: குழு அமைத்து விசாரணை- உயர் கல்வித்துறை உறுதி
Periyar University Question Paper Issue: பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் விவகாரத்தில் விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் விவகாரத்தில் குழு அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்(Periyar University) கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முதுகலை வரலாற்றுத் துறையின் தமிழ்நாடு விடுதலை பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குழு அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் ’ஏபிபி நாடு’விடம் பேசியபோது, அரசு நிகழ்ச்சிக்காக சென்னை வந்ததாகவும், வினாத்தாள் எழுப்பப்பட்ட கேள்வி குறித்து தற்போதுதான் தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வினாத்தாள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையில் விசாரித்து வருவதாகவும், வினாத்தாள் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்படுவதாகவும், வினாத்தாளை எந்த நிலையிலும் துணைவேந்தர் அல்லது பிற ஆசிரியர்கள் பிரித்து படிக்க அனுமதி இல்லை என்றும் கூறினார்.
வினாத்தாளில் சாதி ரீதியான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
தேர்வு வினாத்தாள் அமைப்பதற்கு தனிக் குழு அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே தேர்வு வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது. அதன்பின் அதிகாரிகள் கவனத்திற்கு சென்று அவர்களின் அனுமதி பெற்ற பிறகு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
குழு அமைத்து விசாரணை
இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Rs 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்