Head Master Transfer Issue: ‘சார் போகாதீங்க...’ - தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது என பாசபோராட்டம் நடத்திய பெற்றோர்கள்
பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்களை மதமாற்றுவதாக புகார் கடிதம் எழுதியுள்ளனர். புகார் உடன் பள்ளியிலிருந்து அனுப்ப எங்களுக்கு விருப்பமில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சேலம் செட்டிசாவடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் என்பவர் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸை கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி தாஸ் வந்த பிறகுதான் பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிப்பது உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இதே தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் நீடிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். அவ்வாறு மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றி விடுவோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் செட்டிசாவடி பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்பட்டது. போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்காது என்று கல்வி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். பின்னர் தலைமையாசிரியர் அந்தோணி தாஸ் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் பெற்றோர்கள் கைவிட்டனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியராக இருந்த அந்தோணி தாஸ் ஆறு மாதமாக இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வந்த பிறகு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகின்றனர். மேலும், பள்ளிக்கு தொடர்ச்சியாக வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது, மதிப்பெண் அதிகம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவது என மாணவர்களுடன் பள்ளிக்கு வரும் ஆர்வத்தை தூண்டி வருகிறார். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் தற்போது அவர் மீது பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்களை மதமாற்றுவதாக புகார் கடிதம் எழுதி உள்ளனர். இதனால் தான் தலைமை ஆசிரியரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்கின்றனர். அவரை புகார் உடன் பள்ளியிலிருந்து அனுப்ப எங்களுக்கு விருப்பமில்லை. நல்ல முறையில் எந்தவித புகாரும் இல்லாமல் கல்வித்துறை அதிகாரிகள் மாற்றியிருந்தால் நாங்கள் இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடமாட்டோம். எனவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இந்தப் பணியிடை மாற்ற ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக செட்டி சாவடி ஊராட்சி துவக்கப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தப் பள்ளிக்கு மாற்றம் செய்தும். அங்குள்ள தலைமையாசிரியரை செட்டிசாவடி ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். மேலும், பெற்றோர்களின் கோரிக்கை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.