Education: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- 1,127 மாணவ-மாணவியர் பட்டங்களைப் பெற்றனர்.
இளைஞர்கள், சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் சமத்துவமின்மையிலிருந்து தடுப்பது தார்மீகப் பொறுப்பாகும் என மத்திய அரசின் KIOCL நிர்வாக இயக்குநர் டி.சாமிநாதன் பேச்சு.
சேலம் மாவட்டம் கருப்பூரில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்காக இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,127 மாணவ-மாணவியருக்கு பட்டங்களை மத்திய அரசின் KIOCL நிர்வாக இயக்குநர் சாமிநாதன் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறியது, "ரூ.8 கோடி மதிப்பில் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி அடுத்த சில மாதங்களில் நிறைவடையும். மாணவர்களிடையே கல்வி மட்டுமன்றி விளையாட்டுத் திறனையும் வளர்த்திட உள்விளையாட்டு அரங்கம் பேருதவியாக இருக்கும். அரசு பொறியியல் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.2 கோடியும், கல்வி வசதிகளை பராமரிப்பதற்காக ரூ.10.8 கோடியும் ஒதுக்கப்பட்டது. வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து புதிய தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ரூ.1.8 கோடி மாணவ-மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான உதவித் தொகை மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இன்போசிஸ், லைவ் வயர், டைம்ஸ் உள்ளிட்ட 15 தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட செஸ் போட்டியில் முதலிடத்தையும் பேட்மிண்டன், கிரிக்கெட், டென்னிஸ், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி சிறப்பிடத்தையும் பிடித்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் KIOCL நிர்வாக இயக்குநர் சாமிநாதன் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "நீங்கள் அனைவரும் இப்போது வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் ஏற்ற தாழ்வுகளைக் கொண்ட நிஜ வாழ்க்கைச் சுழற்சியை நோக்கி நகர்கிறீர்கள். அச்சுறுத்தல்கள் மற்றும் நகர்வுகளில் வாய்ப்புகளை தேட வேண்டும். 2024 ஆம் ஆண்டில் உலக ஜிடிபி தரவரிசையில் இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 4 டிரில்லியன் டாலர்களை தாண்டிய இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பொருளாதாரம் 2026-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும். GDP இந்தியாவின் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுரங்கம், எஃகு, உள்கட்டமைப்பு, தளவாடங்கள், சேவைகள், விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளால் தூண்டப்பட்ட பன்முகத்தன்மை மற்றும் விரைவான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. நாம் டிஜிட்டல் மயமாக்கல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் இருக்கிறோம்.
தமிழ்நாடு, ஸ்டார்ட்அப்கள், தொழில் முனைவோர், MEMEகள், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், ஐடிகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு முக்கிய தொழில் மையமாக உள்ளது. நாம் வளரும் வேளையில், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை, திட மற்றும் திரவக் கழிவுகளால் உருவாகும் வெப்பநிலை, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் நிலம் மாசுபடுதல் போன்ற சுற்றுச்சூழல் அபாயங்களிலிருந்து தாய் பூமியைக் காப்பாற்றுவதற்கு மேலும் சவால்களை உருவாக்குகிறது. குளிர்காலம் மற்றும் கோடைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள், மழைக்காலங்களில் ஏற்படும் மாற்றம், இயற்கை சீற்றம் மற்றும் இவை நமது பாதுகாப்பான வாழ்க்கைக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் இடைவெளி இருப்பது கவலை அளிக்கிறது. எனவே, நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், சக மனிதனை சகோதரத்துவமாக நடத்துவதிலும் வாய்ப்பு, சமூக அந்தஸ்து, சுதந்திரம் ஆகியவற்றில் சமத்துவம் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம், குறிப்பாக இளைஞர்கள், இதுபோன்ற சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் சமத்துவமின்மையிலிருந்து தடுப்பது தார்மீகப் பொறுப்பாகும். மேலும் பொறியாளர்களாக இருப்பதால், இதுபோன்ற விஷயங்களைத் தடுப்பதில் அதிக பொறுப்பு உள்ளது என்று பேசினார்.