RRB Group D Exam: தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையமா?- அன்புமணி கண்டனம்
RRB Group D Exam Center: 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். 700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டித் தேர்வை எழுத, தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களில்1,03,769 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வைக்கப்படும் குரூப் டி தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்டத் தேர்வு
வடமத்திய ரயில்வே, வடமேற்கு ரயில்வே , தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆகியவற்றுக்கான இரண்டாவது கட்டத் தேர்வு அல்லது ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே ஆகியவற்றுக்கான மூன்றாவது கட்டத் தேர்வு செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை எழுத தமிழகத்தைச் சேர்ந்த பலர் விண்ணப்பித்திருந்தனர்.
ஹால்டிக்கெட் வெளியீடு
இதற்கிடையே குரூப் டி தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று (செப்டம்பர் 4) வெளியானது. இதில் தமிழக மாணவர்கள் பலருக்கு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டித் தேர்வை எழுத, தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.(1/4)#IndianRailways
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 5, 2022
700 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்; தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும்; மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.
மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.