Religious Politics | கல்வி நிலையங்களில் நுழையும் மத அரசியல்... பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலப்பது சரியா?
கல்வி நிலையங்களில் அரசியல் புரிதல் அவசியமானது. தேவையானது. ஆனால் மத அரசியலின் தலையீடு அபாயகரமானது.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது. அனைவரும் பொதுவான சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று கூறி இந்து அமைப்புகளும், அம்மாநில அரசுமே பேசி வருவது சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.
இதற்கு பதிலடி தருகிறோம் என்று இந்து மாணவர்களும் மாணவிகளும் காவித் துண்டைக் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வருகின்றனர். இன்று (பிப்.8) சமூக வலைதளங்களில் வைரலான ஹிஜாப் அணிந்து தனியாக வரும் மாணவியை, காவித் துண்டணிந்த ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் மாணவர்கள் முழக்கமிடும் காட்சியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.
ஷிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக் கொடி இருந்த இடத்தில் காவிக் கொடியை ஏற்றி, மாணவர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் முகிழ்த்த போராட்டம், வன்முறையாக மாறி 3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவும் முஸ்லீம் பெண்களிடையே தொன்றுதொட்டுப் பாரம்பரியப் பழக்கமாகவும் உள்ள ஹிஜாப் அணிவதை, இந்துப் பெண்கள் துண்டு அணியும் பழக்கத்துடன் எப்படி ஒப்பிட முடியும் என்பது ஆயிரம் டாலர் கேள்வி.
ஒரு சமயப் பழக்கத்தை எப்படி மாணவர்களுக்கு இடையேயான சமத்துவமின்மையாகப் பார்க்க முடியும்?
எல்லாவற்றையும் தாண்டி பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் ஒன்றாய், வருங்காலத் தலைமுறையிடையே சக மாணவர்களிடையே இருக்கும் சகோதரத்துவத்தில், நட்புணர்வில் மதம் என்னும் நச்சைக் கலப்பது எப்படி சரியாகும்?
இந்த அபாயகரமான போக்கு குறித்தும் அதற்கு அறிவுசார் சமூகம் என்ன செய்ய வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் தங்களின் கருத்தை 'ஏபிபி நாடு' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
பேராசிரியரும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவருமான மார்க்ஸ்
கர்நாடகாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்கு என்பது 20 ஆண்டுகளாகவே உள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பாஜக இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது. உடை கட்டுப்பாடு என்பது பாஜகவின் நீண்டகாலக் கோட்பாடுகளில் ஒன்று. இறுக்கமாக உடை அணியக் கூடாது, காதலர் தினத்தைக் கொண்டாடக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது பாஜக. இவை அனைத்துமே மக்களின் தனிப்பட்ட உரிமைகள்.
இந்தியர்களுக்கு சிறப்பான அரசமைப்புச் சட்டம் இன்றுவரை உள்ளது. வருங்காலத்தில் அதையும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சட்டத்தின்படி மத ரீதியான உடைகள் அணிவதை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
குடியுரிமையே இல்லை
முஸ்லிம்களின் குடியுரிமையே இல்லை என்ற சூழலில், எந்தெந்த வகைகளில் எல்லாம் அவர்களைத் துன்புறுத்த முடியுமோ, அந்த வகைகளில் அச்சுறுத்தல்கள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் இத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பது வன்முறையாகக் கண்டிக்கத்தக்கது. தனிப்பட்ட வகையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். அதற்காக ஹிஜாப் போடாதே என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
இந்து மாணவர்கள் தினசரி காவித்துண்டு அணியப் போவதில்லை. அது அவர்களின் மதக் கடமையும் கிடையாது. அப்படியே அணிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் அணியக்கூடாது என்பதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது.
முஸ்லிம்களுக்கான தனி அடையாளங்களை எல்லா வகைகளிலும் அழிப்பதுதான் நோக்கம். நாளை சுன்னத் செய்யக் கூடாது என்றுகூடச் சொல்லலாம். இந்தியாவில் ஏராளமான இந்துப் பெண்கள் தலையில் முக்காடு அணிகின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே பொதுக் கூட்டங்களின்போது முக்காடு அணிந்திருந்தார். அப்போது அது தடுக்கப்படவில்லையே? வருங்காலத்தில் முஸ்லிம் மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படலாம்.
பதுங்கு குழி மனநிலை
எப்போதுமே தாக்குதல் வரும்போது மனித சமூகம் பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும். அதேபோல தங்கள் சமூகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்ற அச்சம் வரும்போது, மக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை அதிகம் பின்பற்றத் தொடங்குவர். தங்கள் அடையாளத்துக்குள் இறுக்கமாக ஒதுங்கி, மத அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதாக நினைக்க ஆரம்பிப்பர். அதுதான் இப்போது முஸ்லிம்களிடையே நடக்கிறது.
நீதிமன்றங்களில் ஹிஜாப் குறித்து இரண்டு விதமான தீர்ப்புகள் இருக்கும் நிலையில், அதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. இந்தியாவில் உள்ள நடுநிலையானவர்கள், மதச்சார்பற்றவர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.
கல்வியாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
மக்கள், தங்களின் பண்பாட்டின் கூறான மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆடைகள் அணிவது, இந்தியர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை பள்ளி நிர்வாகத்தாலோ, அரசினாலோ மறுக்க முடியாது. அணியும் ஆடை நாகரிகமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டைத் தாண்டி வேறு எந்த நிபந்தனையையும் விதிக்க இயலாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஓர் அரசு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும். அந்த அரசு எந்த மதத்தையும் ஆதரிக்கவும் முடியாது. இந்த மதம்தான் தன்னுடையது என்று அடையாளப் படுத்திக்கொள்ளவும் முடியாது. ஆனால் தனி மனிதர்களுக்கு அந்த உரிமை உள்ளது. எனினும் பள்ளிகளில் மத நம்பிக்கைகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல அரசமைப்புச் சட்டம் எந்த ஒரு மதத்தை நம்பவும் நம்பாமல் இருக்கவும் எனக்கு உரிமை அளித்துள்ளது. அதைப் பறிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் அரசுகள் அரசியலைமைப்பின்படி ஆட்சி செய்கின்றனவா அல்லது அவரவர் விருப்பு, வெறுப்பின்படி ஆட்சி நடக்கின்றனவா என்று கேள்வி எழுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விடப்பட்ட சவால்.
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கு, அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே விஷத்தை ஏற்றுவது ஆபத்தானது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். 'நீ வேறு, நான் வேறு.. ஆனால் இருவரும் ஒன்றாக இருப்போம்!'. 'உன் உணவு வேறு, என் உணவு வேறு, ஆனால் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்போம்!' என்றுதான் குழந்தைகளைப் பழக்கப்படுத்தி இருக்கிறோம். அதுதான் தொடர வேண்டும்.
இப்போது திடீரென அந்த ஒற்றுமையைச் சிதைக்கும் செயலை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய போக்கை மக்கள் கூட்டம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது. இத்துடனாவது அரசு தன்னை மாற்றிக்கொள்வது நல்லது. இல்லையெனில் இது மக்கள் போராட்டமாக மாறும்.
சமூக செயற்பாட்டாளர் சல்மா
கல்வி நிலையங்களில் அரசியல் புரிதல் அவசியமானது. தேவையானது. ஆனால் மத அரசியலின் தலையீடு அபாயகரமானது. கல்லூரிகளில் ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நாஜி மாணவர்களிடம் மத அரசியல் புகுத்தப்பட்டது. இது தொடரக் கூடாது.
கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டங்கள் நடைபெறுவதற்குப் பின்னணியில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் உள்ளன. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான போட்டியே இந்தத் தேர்தல் என்ற வகையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். இதன்மூலம் இந்துக்களிடையே மத உணர்வைத் தூண்டி, தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார்கள்.
இப்போது கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நடந்த ஹிஜாபுக்கு எதிரான போராட்டம், பல்வேறு கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது. இது இந்தியா முழுக்கவும் பரவலாம்.
கேள்விக்குறியாகும் கல்வி
பன்னெடுங் காலமாக முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கற்காத நிலை இருந்தது. இப்போதுதான் ஹிஜாப் அணிந்தாவது படிக்க வருகிறார்கள். இப்போது அந்தக் கல்வியும் கேள்விக்குறி ஆக்கப்படுகிறது. மாணவிகள் பொட்டு வைப்பது, சிலுவை அணிவதுபோல ஹிஜாப் அணிவதும் ஏற்கெனவே வழக்கத்தில் இருப்பதுதானே? இங்கு காவித்துண்டுக்குத் திடீரென என்ன வேலை?
முஸ்லிம் மாணவிகள் தீண்டத்தகாத மக்கள்போலத் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைப் போக்கு கட்டமைக்கப்படுகிறது. ஹிஜாப் அணிந்த ஒரு மாணவியை நூற்றுக்கணக்கான மாணவர்கள் முற்றுகையிடுவது ஈவ்-டீஸிங்கில் சேரும் என்பதை அந்தக் கல்லூரியும் அரசும் அறியவில்லையா? இதைத் திட்டமிட்ட வன்முறை ஆகத்தான் பார்க்க வேண்டும்.
மாணவர்களுக்குப் பிரிவினைவாதம் கற்பிக்கப்படுகிறது. அறிவார்ந்த நபர்களாக மாறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இடையே மதம் புகுந்தால், அவர்களின் சிந்திக்கும் திறன் வேலை செய்யுமா? மாணவர்களை சுய சிந்தனைகளற்ற ஆட்டு மந்தைகளாக மாற்றும் வேலை நடக்கிறது. இது நாடு அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது என்கிறார் சல்மா.
என்ன செய்ய வேண்டும்?
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுதிரள வேண்டும் என்பதே பெரும்பாலான செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது. சல்மா கூறும்போது, ’’இத்தகைய போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் ஒன்றுதிரள வேண்டும். தேவைப்பட்டால் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு மதச்சார்பின்மையை உறுதி செய்ய வேண்டும். வளரும் தலைமுறைகளிடையே சகோதரத்துவ சூழலை ஏற்படுத்த வேண்டும்.
கல்வி நிலையங்களைக் கைப்பற்றி அங்கு படிக்கும் மாணவர்களின் நெஞ்சில் நஞ்சைப் புகுத்தும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக. இதில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத் துணை வேந்தரின் நியமனமும் ஒன்று. இந்தப் போக்கை முறியடிக்க வேண்டும். இன்று விட்டால் இது நாளையும் தொடரும். மாணவர்களின் மூளை மழுங்கடிக்கப்படும்’’ என்கிறார் சல்மா.
மக்களிடையே மத அரசியலைப் புகுத்துவது ஆபத்தான போக்கு என்னும் நிலையில், மாணவர்களிடையே அது தூண்டி விடப்படுவதைக் கட்டாயம் தடை செய்ய வேண்டும். அதேபோல மாணவர்கள் என்ற போர்வையில் கல்வி நிறுவனங்களில் அத்துமீறி நுழைந்து மத வன்முறைகளில் ஈடுபடும் களைகளை வேரோடு பிடுங்க வேண்டும். மாணவ சமுதாயத்தை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது.