QS World University Rankings: உலகின் டாப் பல்கலைக்கழகங்கள்: பட்டியலில் இடம்பிடித்த அண்ணா பல்கலை, ஐஐடி சென்னை!
QS World University Rankings 2023: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை ஆகியவை இடம்பிடித்துள்ளன.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை ஆகியவை இடம்பிடித்துள்ளன.
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலின் முதல் 200 இடங்களில், 2 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. முதல் 300 இடங்களில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1,500 கல்வி நிறுவனங்களில் ஆய்வு
உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி,
கல்வி நிறுவனத்தின் நற்பெயர், ஆசிரியர்கள் பிரசுரித்த ஆய்விதழ்கள், கல்வி சார்ந்து இருக்கும் நற்பெயர், வேலைவாய்ப்புகள், நிலைத் தன்மை, ஆசிரிய-மாணவர் விகிதம், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் எண்ணிக்கை, சர்வதேச ஆராய்ச்சி பின்புலம், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதைக் கொண்டு, க்யூஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் 104 இடங்களில் இருந்து 1,500 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
12 ஆண்டுகளாக முதலிடம்
இந்த நிலையில் க்யூஎஸ் அமைப்பு தனது 20ஆவது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று (ஜூன் 28) வெளியிட்டது. அதாவது 2024ஆம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 12 ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகமே முதலிடத்தில் உள்ளது. அதேபோல காம்பிரிட்ஜ் பல்கலை. இரண்டாவது இடத்தையும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் ஒட்டுமொத்த அளவில் ஐஐடிகள் சற்றே சரிவைச் சந்தித்துள்ளன. டெல்லி ஐஐடி 197வது இடத்தையும், பெங்களூரு ஐஐஎஸ்சி 225வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை ஐஐடி 285ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் 150 இடங்களுக்குள் வந்த மும்பை ஐஐடி
அதே நேரத்தில் மும்பை ஐஐடி 149வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே இந்திய பல்கலைக்கழகம் என்ற சிறப்பை மும்பை ஐஐடி பெற்றுள்ளது.
கரக்பூர் ஐஐடி 270ஆவது இடத்தில் இருந்து 271ஆவது இடத்தை நோக்கிச் சரிந்துள்ளது. இதேபோன்று கான்பூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, சென்னை ஐஐடி மற்றும் ரூர்கி ஐஐடி ஆகியவையும் கடந்த ஆண்டு இருந்த இடத்தில் இருந்து சரிவைச் சந்தித்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல்
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 427ஆவது இடத்தைப் பிடித்து, 551- 560 என்ற தரவரிசைப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 651-700 என்ற பிரிவிலும், 2019ம் ஆண்டு 751-800 என்ற தரவரிசை பிரிவிலும் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழுப் பட்டியலையும் காண https://www.topuniversities.com/university-rankings/world-university-rankings/2024?&page=1&tab=indicators®ion=Asia&countries=in&sort_by=overallscore&order_by=desc என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.