Punnagai Thittam: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான புன்னகை திட்டம்- தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு
பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'புன்னகை' பல் பாதுகாப்பு திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொற்று நோய்களைத் தடுக்க
முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன் தரும்.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ’’மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, ‘புன்னகை' எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இந்ததிட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு
இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. எனவே இதுகுறித்து சுகாதாரத் துறையின் மாவட்ட அலுவலர்கள் பள்ளிகளுக்கு வர உள்ளனர். அவ்வாறுஅணுகும்போது, சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசிக்க வேண்டும். தொடர்ந்து புன்னகை திட்டம் தொடர்பான பணிகளை ஒருங்கிணைந்து, மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புன்னகை திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசும்போது, ’’இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு ஏறத்தாழ 50% முதல் 60% குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. எனவே இந்த நோய்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்களை காப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் பரிசோதனை
பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்காக குறிப்பாக அரசுப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்ற, மாநகராட்சி பள்ளிகள் அதேபோல் அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள்.
சென்னையில் பயிலும் 54,000 மாணவர்களுக்கு பரிசோதனைகள் முடிவுற்றவுடன் தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி பங்களிப்போடு தமிழ்நாட்டின் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 4 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.