புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு; மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்!
புதுச்சேரியில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.
கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்றால் வேலை இழந்துள்ள பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இது அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர். பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தங்களது பெயர் உள்ள மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைத்தனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதில் ஒரு சில மாணவர்கள் சம மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இடங்களை ஒதுக்குவது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் 19-ந் தேதி காலியிட விவரங்கள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அவர்களுக்கு 21-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 22-ந் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23-ந் தேதி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதன் பின்னர் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெறும்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, கல்வி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பையும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கல்வி மற்றும் உயர்கல்வி துறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.