‛கல்வியே சமூகத்திற்கான பாதை’ என வாழ்ந்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் காலமானார்!
தமிழகத்தில் நடைமுறையில் இருந்த தொழில்முறைக் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த குழுவின் தலைவராக இருந்தவர், தனது பணி ஓய்வுக்குப் பின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களும் அவருக்குக் கவுரவப் பதவிகளை வழங்க முன்வர அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார் அனந்தகிருஷ்ணன்.
கல்வி சமுகநீதிக்கான பாதையாக இருக்க வேண்டுமென வலியுறுத்திய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் மறைவு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. பேராசிரியர் அனந்தகிஷ்ணன் பற்றி இப்போதுவரை அறிந்திராதவர்களுக்காக அவர் பற்றி சிலவற்றை நினைவூட்டுகிறோம்.
யார் இந்த அனந்தகிருஷ்ணன்..
பேராசிரியர் அனந்தகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். இவர், ஐஐடி கான்பூர் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார். தமிழகத்தில் நடைமுறையில் இருந்த தொழில்முறைக் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த குழுவின் தலைவராக இருந்தார்.
தனது பணி ஓய்வுக்குப் பின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களும் அவருக்குக் கவுரவப் பதவிகளை வழங்க முன்வர அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார். ஒருமுறை வெளிநாடு சென்றுவிட்டு சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய அனந்தகிருஷ்ணனிடம் கையில் சுத்தமாக இந்திய ரூபாய் இல்லை. அப்போது அவருக்கு பெரும் கல்விக்குழும தலைவர் ஒருவர் ரூ.1000 கொடுக்க சில தினங்களிலேயே அவர் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தினார். அந்தக் கல்லூரி நிர்வாகம் அந்த 1000 ரூபாய் நோட்டை பிரேம் போட்டு வைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளை தமிழ்வழியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தமிழக பள்ளிக்கல்வி திட்டத்திலும் பல புரட்சிகளைப் புகுத்தியுள்ளார். அதேபோல் தவறுகளைத் தட்டிக்கேட்க அவர் எவ்வித தயக்கமும் காட்டியதில்லை. இந்தியா முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை பிளாக்லிஸ்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தவர். தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நிலவிவந்த ஊழலை அம்பலப்படுத்தியவர். தலைமைச் செயலகம் தொடங்கி ராஜ்பவன் வரை துணை வேந்தர் நியமனத்துக்கு வேலை செய்யும் புரோக்கர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். இத்தகைய பெருமைவாய்ந்த நேர்மையான சமூக சிந்தனை கொண்ட அனந்தகிருஷ்ணனின் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கனிமொழி அஞ்சலி
கல்வி சமுகநீதிக்கான பாதையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியவர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் என திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி கான்பூர் - தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும் (1/2) pic.twitter.com/2IAJdOd6Pm
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 29, 2021
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி கான்பூர் - தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும் சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவார். கருணாநிதி பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.