மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதில் சிக்கல்! நிபந்தனைகள் ஏற்புடையதல்ல - அமைச்சர் அன்பில் மகேஷ்
”இன்று நமது மாநிலத்திற்கான உரிமையில் கல்வியில் கை வைத்து விட்டனர். நான் சொல்வதை செய்தால் பணம் தருகிறேன் என்று எந்த ஒரு கண்டிசனும் கிடையாது”

தூண்டில் வளைவு அமைக்க அடிக்கல்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூடங்குளம், உவரி, கூட்டப்புளி உள்பட 10 க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளது. இங்கு கடல் அரிப்பு காரணமாக கடல் தண்ணீர் ஊருக்குள் வருவதால் மீன்பிடிக்க செல்வதில் சிரமமும் ஏற்பட்டது. இதனையடுத்து இங்கு பல கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் குடியிருப்பு பகுதிகளை அரிக்கத் தொடங்கியது. மேலும் மீனவர்கள் கரைகளில் தங்களது படகுகளை நிறுத்தி வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் கூட்டப்புளி மக்கள் நீண்ட நாட்களாக தூண்டில் வளைவு கேட்டு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க 48.50 கோடி நிதி ஒதுக்கினார். இதற்கான பணிகள் தொடக்க விழா கூட்டப்புளி கிராமத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு தரமான கல்வி, ஆசியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும் பொழுது, பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் 249 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துவிட்டனர். 2120 கோடி ரூபாய் நாம் கேட்டிருந்த நிலையில் 1870 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய 573 கோடி ரூபாயை வழங்கவில்லை. இதனால் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் , பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதிலும் மிகப்பெரிய சிக்கலுக்கு உரியதாகியுள்ளது. இன்று நமது மாநிலத்திற்கான உரிமையில் கல்வியில் கை வைத்து விட்டனர். நான் சொல்வதை செய்தால் பணம் தருகிறேன் என்று எந்த ஒரு கண்டிசனும் கிடையாது. ஒரு சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பட்ஜெட் பாஸ் செய்துவிட்டால் அதற்கான பணத்தை ஒதுக்கி தான் ஆக வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் தான் பணம் தருவேன் என்கிற முடிவில் இருக்கிறார்கள். இதை தமிழக முதல்வர் பேசும் பொழுது கூட இது கொள்கை சார்ந்த விவாதம், அதையும் இதையும் முடிச்சி போட்டு வருடம் வருடம் வழங்கக்கூடிய நிதியில் கை வைக்காதீர்கள் இதனால் எங்கள் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என அழுத்தம் திருத்தமாக கடிதத்தை எழுதிவிட்டு தான் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
நிதியை கொடுங்க, நிபந்தனைகள் ஏற்புடையது அல்ல:
பிரதம மந்திரி திட்டத்தில் பேசும் பொழுது தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக தான் பிரதம மந்திரி மாதிரி பள்ளியை கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் 14500 பள்ளியை கொண்டு வரப்போகிறோம் என்று சொல்லும் போது கூட அதனை ஏற்றுக் கொள்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும் என்றோம். அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் கேட்கிறோம். அதற்கான நிதியை வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். தரமான கல்வியை நாங்களும் தந்து கொண்டு தான் இருக்கிறோம் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல, அது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் இடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

