TRB Vacancies: ஆசிரியர்களுக்கு நற்செய்தி: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு- டிஆர்பி அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 3,237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் கல்வித்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது. 2020- 21ஆம் ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் – 271, ஆங்கிலம் – 192, கணிதவியல் – 114, இயற்பியல் – 97, வேதியியல் – 191,விலங்கியல் – 109,தாவரவியல் – 92, பொருளாதாரவியல் – 289, வணிகவியல் – 313, வரலாறு – 115, புவியியல் – 12,அரசியல் அறிவியல் – 14, வீட்டு அறிவியல் – 3, இந்திய கலாச்சாரம் – 3, உயிர் வேதியியல் -1, உடற்கல்வி இயக்குநர் ( நிலை1) – 39, கணினி பயிற்றுவிப்பாளர் – 44 என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியானது.
கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ரூபாய் 36,900 முதல் ரூ.1,16,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்தனர். தேர்வர்களுக்கு கணினி வழித் தேர்வுகள் நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தேர்வு தள்ளிப்போய் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இரு வேளைகளில் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வை 2,13,893 பேர் எழுதினர்.
இவர்களுக்கான உத்தேச விடைகள் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகின. தேர்வர்களிடம் இருந்து விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் ஏப்ரல் 9 முதல் 13ஆம் தேதி மாலை 5.30 வரை பெறப்பட்டன. வெளியான விடைகள் குறித்த 4,276 தேர்வர்களின் இணைய வழியிலான விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவை மே 10 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை, மொத்தம் 115 பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டன. அவர்களின் ஆய்வு முடிவின் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விடைகள் திருத்தம் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளோடு இறுதி விடைக் குறிப்பும் வெளியானது.
அதிகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்
2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பழைய காலிப் பணியிடங்கள் 247 இருந்த நிலையில், தற்போதைய காலிப் பணியிடம் 1,960 என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பழைய காலிப் பணியிடங்கள் 269 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல தற்போதைய காலிப் பணியிடங்கள் 2968 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த காலியிடங்கள் 3,237 ஆக உயர்ந்துள்ளன.
அதிகரிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து முழுமையாக அறிய: http://www.trb.tn.nic.in/pg2021/03082022/PGAmendment_03_08_22.pdf
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்