Pomodoro: எதுலேயும் முழுசா கவனம் செலுத்த முடியலையா? உதவும் போமோடோரோ நுட்பம்- மாணவர்களுக்கு முழு வழிகாட்டி!
இப்போதெல்லாம் எல்லோருக்கும் ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. இங்குதான் போமோடோரோ நுட்பம் உங்களுக்கு கைகொடுக்கிறது.

மாணவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படும், கவனச் சிதறலைத் தடுக்கும் போமோடோரோ நுட்பம், மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நீங்கள் படிக்கும்போதோ அல்லது வேலை செய்யும்போதோ, திடீரென உங்கள் கவனத்தை இழந்து, தொலைபேசியில் ஸ்க்ரோல் செய்வதையோ அல்லது பகல் கனவு காண்பதையோ எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? மொபைலில் எதையோ பார்க்கப்போய் சமூக வலைதளத்துக்குச் சென்று எதையோ பார்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறீர்களா?
இப்போதெல்லாம் எல்லோருக்கும் ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. இங்குதான் போமோடோரோ நுட்பம் உங்களுக்கு கைகொடுக்கிறது. போமோடோரோ என்பது ஒரு விஷயத்தில் ஒருமுகமாய், முழு கவனம் செலுத்தவும், சோர்வைத் தவிர்க்கவும், பணிகளைச் சிறப்பாக முடிக்கவும் உதவும் எளிய முறையாகும்.
போமோடோரோ நுட்பம் என்றால் என்ன?
போமோடோரோ நுட்பம் என்பது 1980-களின் பிற்பகுதியில் ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர மேலாண்மை முறையாகும். இதன் அடிப்படை மிகவும் எளிது.
நீங்கள் "போமோடோரோஸ்" எனப்படும் குறுகிய, கவனம் நிறைந்த நேர இடைவெளிகளில் வேலை செய்கிறீர்கள், இடையில் குறுகிய ஓய்வு எடுக்கிறீர்கள்.
போமோடோரோ என்பது வழக்கமாக 25 நிமிடங்கள் தீவிரமான வேலையாகும், அதைத் தொடர்ந்து 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலம். இவ்வாறு நான்கு 25 நிமிடங்களுக்கு (போமோடோரோக்களுக்கு) பிறகு, நீங்கள் சுமார் 15-30 நிமிடங்கள் நீண்ட ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒவ்வோர் இரு மணி நேரத்துக்கும் ஒரு முறை கால் மணி நேர இடைவெளி எடுக்கலாம்.
பயன்படுத்துவதற்கான வழிகாட்டி
நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் ஒரு பணியைத் தேர்ந்தெடுக்கவும்:
அது எழுதுவதாகவோ, படிப்பதாகவோ அல்லது ஒரு திட்டத்தை முடிப்பதாகவோ இருக்கலாம்.
25 நிமிடங்களுக்கு டைமரை அமைக்கவும்:
நீங்கள் உங்கள் தொலைபேசி, டைமர் செயலி அல்லது சமையலறை டைமரைப் பயன்படுத்தலாம். டைமர் ஒலிக்கும் வரை நீங்கள், பணியை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்பதே முக்கியம்.
கவனம் செலுத்தி வேலை செய்யுங்கள்:
டைமர் ஒலிக்கும் வரை, நீங்கள் தேர்ந்தெடுத்த பணியில் முழுமையாக ஈடுபடுங்கள். கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், தொலைபேசி அல்லது இணையதள அறிவிப்புகளை முடக்கி வையுங்கள்.
குறுகிய ஓய்வு எடுங்கள்:
25 நிமிடங்கள் முடிந்ததும், 5 நிமிடங்களுக்கு குறுகிய ஓய்வு எடுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் எழுந்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம், அல்லது கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். அப்போது வேலையைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. போனையும் பார்க்க வேண்டாம்.
செயல்முறையை மீண்டும் செய்யவும்:
முதல் போமோடோரோ முடிந்ததும், மற்றொரு 25 நிமிட போமோடோரோவைத் தொடங்கி, மீண்டும் 5 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். இதை நான்கு முறை தொடர்ந்து செய்யவும்.
நீண்ட ஓய்வு எடுங்கள்:
நான்கு போமோடோரோக்கள் மற்றும் நான்கு குறுகிய ஓய்வுகளுக்குப் பிறகு, நீங்கள் 15-30 நிமிடங்களுக்கு நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நீண்ட ஓய்வில் நீங்கள் உணவு உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஓய்வெடுக்கலாம். இது உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
இந்த நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம், மாணவர்கள், இளைஞர்கள், ஊழியர்கள் தங்கள் கவனத்தை மேம்படுத்தி, சோர்வைத் தவிர்த்து, அதிக உற்பத்தித் திறனுடன் செயல்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.























