Old Pension Scheme: பழைய ஓய்வூதிய வாக்குறுதி என்னாச்சு? 20 கோடி பேர் பங்கேற்கும் வேலைநிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ பங்கேற்பு!
Old pension Scheme: அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2025, ஜூலை 9 அன்று சுமார் 20 கோடி போ் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ- ஜியோ பங்கேற்க உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனுக்காக ஜாக்டோ ஜியோ என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. இதன்கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மே 24ஆம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு, 20 கோடி பேர் பங்கேற்கும் வேலைநிறுத்தத்தில் ஜாக்டோ ஜியோ பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 19.05.2025 அன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 19.05.2025 அன்று இரவு மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கடந்தகால நடவடிக்கைகளான 22.04.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணி மற்றும் 28.04.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த 9 அறிவிப்புகளை தொடர்ந்து 29.04.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு கீழ்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
24.05.2025 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு மாற்றாக நமது கோரிக்கைகள் தொடர்பாக அரசின் 9 அறிவிப்புகள் குறித்து ஜுன் 2வது மற்றும் 3வது வாரத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், பணியாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை கொண்டு செல்வது என முடிவாற்றப்பட்டது.
ஜூலை 9 அன்று வேலை நிறுத்தம்
PFRDA ரத்து செய்தல், 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசம் முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2025, ஜூலை 9 அன்று சுமார் 20 கோடி போ் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ- ஜியோ பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
ஜூலையில் அடுத்த கட்ட நடவடிக்கை
ஜூலை மாதம் 3வது வாரத்தில் மீண்டும் ஜாக்டோ-ஜியோ கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடுவது என முடிவாற்றப்பட்டது என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.






















