JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ஜாக்டோ ஜியோ அமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையறை இல்லாத போராட்டம் தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன. முன்னதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. எனினும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TETதேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (டிசம்பர் 22) ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊரியர்களின் கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையறை இல்லாத போராட்டம் தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, இதுகுறித்து போட்டா ஜியோ அமைப்பு கூறும்போது, இன்றைய கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாத சூழலில் வரும் டிசம்பர் 29 அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். ஜனவரி 6ஆம் தேதி முதல் காவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் திட்டமிட்டபடி தொடரும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என தெரிவித்துள்ளனர்.






















