CM Stalin on NEXT: தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கைவிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அது என்ன நெக்ஸ்ட் தேர்வு?
எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (National Exit Test) எனப்படும் நெக்ஸ்ட் (NEXT Exam) தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும்.
அதேபோல, எஃப்எம்ஜிஇ (Foreign Medical Graduates Examination) தேர்வுக்கு பதிலாக வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் நெக்ஸ்ட் இருக்கும் என்று மருத்துவ ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், இந்தத் தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
தகுதித் தேர்வு என்பது கூடுதல் சுமை
இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர், ’’நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வியின் பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் இறுதி செய்து, தேவைப்படும்போது மாற்றி அமைக்கிறது. பாடத்திட்டம், பயிற்சி, தேர்வு முறை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ பல்கலைக்கழகங்கள் தீவிரமாகக் கண்காணிக்கின்றன. தொடர் பயிற்சி மற்றும் தேர்வுக்குப் பிறகே எம்பிபிஎஸ் பட்டம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கு தகுதித் தேர்வு என்பது கூடுதல் சுமையாகவே இருக்கும்.
அத்துடன் இத்தகைய கட்டாய தகுதித் தேர்வு, மருத்துவக் கற்றலை (clinical learning) தடை செய்யும். இந்தக் கற்றல், எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். தகுதித் தேர்வு தியரி பாடம் சார்ந்த கற்றலையே அதிகம் ஊக்கப்படுத்தும். இது மாணவர்களின் செய்முறை மருத்துவக் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.