நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா..! ஆளுநர் ரவி பங்கேற்பு..!
இந்த விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 108 மாணவர்களும் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்களும் என 459 பேர் பட்டத்தை நேரிடையாக பெற்றுகொண்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுனர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழா அரங்கிற்கு வந்த ஆளுநர், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கான்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினாக்ஷ் வியாஸ், ஆகியோர் விழாவின் தொடக்கமாக குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கான்பூர் ஐஐடியின் முன்னாள் துணைவேந்தர் நளினாஷ் எஸ்.வியாஸ் பட்டமளிப்பு விழா பேரூரையாற்றி பேசுகையில்,
இந்த உலகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பட்டம் பெற்ற நீங்கள் முக்கிய பங்கு வகிப்பேர்கள். போட்டிகள், சவால்கள் அதிகமாக உள்ள நிலையில் உங்கள் வாழ்க்கையை தொடங்குகிறீர்கள், நீங்கள் தேர்வு செய்ததுறையில் திறன் மிக்கவர்களாக வரவேண்டும். நீங்கள் மாற்றத்தின் முகவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். திருநெல்வேலியிலேயே விவசாயம், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. இதே போல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளின் பல்கலைகழகங்களுடன் திறன் ஒப்பந்தம் செய்து இருப்பதால் திறன் மேம்பாட்டிற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து புதிய யோசனைகளை முயற்சிகளாக்கி முற்போக்கு சிந்தனையோடு வெற்றி பெற வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் உள்ளதால் தன்னம்பிக்கையோடு பிற்போக்கு சிந்தனை இல்லாமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது இரும்பு, எஃகு , ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள இது உதவும், இந்தியா இன்று எல்லை தாண்டிய வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த வளர்ச்சியில் பட்டம் பெற்ற மாணவர்களாகிய உங்களின் பங்கும் இருக்கவேண்டும் என கூறினார்.
பின்னர் மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 108 மாணவர்களும் ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்களும் என 459 பேர் பட்டத்தை நேரிடையாக பெற்றுகொண்டனர். மொத்தமாக 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டங்களை பெற்றுள்ளனர். இந்த விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.