NEET UG Result Declared: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... செப்.12ல் தேர்வு நடந்தது!
சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடந்தது. மொத்தம் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்த சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர்.
இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, மும்பையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட "கோடிங் தாள் மற்றும் புக்லெட்" இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகளும், குளறுபடிகளும் இருந்ததால், நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை.
எனவே தங்களுக்கு மறுதேர்வு நடத்தும்வரை இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு மாணவர்களுக்கும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
அவர்களுக்கு விரைந்து நீட் மறுதேர்வை தடத்த வேண்டும் எனவும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அந்த மேல் முறையீட்டு மனுவில், “லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். மாணவ சேர்க்கையும் தாமதமாகிறது.. எனவே மும்பை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்க வேண்டும்” என கோரியது.
இந்த மனுவானது கடந்த 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16 லட்சம் மாணவர்கள் ஒரு தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், இரண்டு பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது சரியானது அல்ல.
எனவே, எம்.பி.பி.எஸ் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டது.
அதேசமயம் பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்த இரண்டு மாணவர்களின் புகார்கள் குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்