NEET UG Counselling 2021 | பொங்கலுக்குப் பிறகே எம்.பி.பி.எஸ் மருத்துவக் கலந்தாய்வு?
பொங்கலுக்குப் பிறகே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கானஅகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்குப் பிறகே இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கானஅகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மருத்துவக் கலந்தாய்வு ஒத்திப் போவதை மருத்துவக் கலந்தாய்வுக்கான குழு உறுதிப்படுத்தி உள்ளது.
மருத்துவக் கல்வியில் சேர தேசிய நுழைவுத் தேர்வான நீட்டில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அகிய இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை மருத்துவப் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு 85% இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.
அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்தது. இதில் தகுதி பெற, சம்பந்தப்பட்ட பிரிவினரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த தடை விதித்தது. இதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைத் தெரிவித்துள்ள மருத்துவக் கலந்தாய்வுக்கான குழு, மருத்துவக் கலந்தாய்வு தேர்வர்களுக்கான தகவலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையை அடுத்து பொங்கல் விடுமுறை வருவதால், பொங்கலுக்குப் பிறகே எம்பிபிஎஸ் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால், மாநில இட ஒதுக்கீட்டான கலந்தாய்வும் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்