NEET 2025 Cut Off Marks: குழப்பி அடித்த நீட் தேர்வு கேள்விகள் - குறையும் கட்-ஆஃப் மார்க், யாருக்கு எவ்வளவு? கணக்கீடு
NEET 2025 Cut Off Marks: நடப்பாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், மருத்துவ படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

NEET 2025 Cut Off Marks: நடப்பாண்டு நீட் தேர்வு முடிவில் மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 30 முதல் 40 வரை குறையலாம் என கூறப்படுகிறது.
நீட் தேர்வு - குழப்பி அடித்த கேள்விகள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. 500 நகரங்களில் அமைக்கப்பட்ட 5 ஆயிரத்து 543 மையங்களில் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், கடும் பாதுகாப்பு சோதனைகளை எல்லாம் கடந்து சென்று தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வில் இயற்பியல் பிரிவில் கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும், வேதியியலில் கேள்விகள் நீளமானதாக இருந்ததகாவும் தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர். வேதியியல் சமன்பாடுகள் மற்றும் கணக்கீடுகள் அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதால், 180 கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வினாத்தாளில் பிரச்னை என்ன?
இயற்பியலில் கேள்விகளுக்கு நீண்ட கணக்கீடுகள் அடிப்படையில் தீர்வு காண வேண்டி இருந்ததாகவும், வேதியியலில் கேள்விகள் நேரடியாக இல்லாமல் சமன்பாடுகள் அடிப்படையில் நீண்டு சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்ததகாவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். சில கேள்விகள் ஜேஇஇ தரத்தில் இருந்ததாகவும், கேள்வித்தாளின் ஒட்டுமொத்த நீளமும் மாணவர்களிடையே மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நீட் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் குறையலாம், மருத்துவ படிப்பு அனுமதிக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களும் குறையலாம் என கூறப்படுகிறது. மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 30 முதல் 40 வரை குறையலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நீட் தேர்வு - குறையும் கட் ஆஃப்?
நீட் தேர்வு வினாத்தாளின் கடினத்தன்மையை தேசிய தேர்வு முகமை, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றியுள்ளதாகவும், இதனால் தேர்வர்களின் மதிப்பெண்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை குறையலாம் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். மேலும், 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர்கள் கணிக்கின்றனர்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடுவது எப்படி?
பரபரப்புக்கு பஞ்சமின்றி நீட் தேர்வு முடிந்த நிலையில், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணாக எவ்வளவு நியமிக்கப்படும் என்பதே தற்போது மாணவர்களின் பிரதான கேள்வி ஆக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS,BDS, AYUSH, BVSc, BSc Nursing போன்ற படிப்புகளில் அட்மிஷன் பெற கட்-ஆஃப் மதிப்பெண்களே அடிப்படையாகும். கேள்வித்தாளின் கடினத்தன்மை, தேர்வர்களின் எண்ணிக்கை, இடஒதுக்கீடு முறைகள், மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள், வரும் ஜுன் மாதம் வெளியாகவுள்ள தேர்வு முடிவின் போது அறிவிக்கப்படும். ஆனால், வல்லுநர்கள் தற்போதே அதை கணக்கிட தொடங்கிவிட்டனர்.
நீட் 2025 - எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மார்க்?
கல்வியாளர்களின் கணிப்பின்படி, நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 710 முதல் 138 ஆக இருக்கலாம். கடந்த ஆண்டு இது 720 முதல் 162 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்களாக வல்லுநர்கள் கணித்து இருப்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
| பிரிவு | தேர்ச்சி சதவிகிதம் | எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் |
| General | 50% | 720-162 |
| OBC | 40% | 161-127 |
| SC | 40% | 161-127 |
| ST | 40% | 161-127 |
| General - pwD | 45% | 161-144 |
| OBC/SC - pwD | 40% | 143-127 |
| ST-pwD | 40% | 139-127 |
கடந்த கால கட்-ஆஃப் மார்க் விவரங்கள்:
| ஆண்டு | பொதுப்பிரிவினருக்கான கட்-ஆஃப் | OBC/SC/ST கட்-ஆஃப் |
| 2024 | 720-164 | 163-129 |
| 2023 | 720-137 | 136-107 |
| 2022 | 715-117 | 116-93 |
| 2021 | 720-138 | 137-108 |
| 2020 | 720-147 | 146-113 |
முதன்மையான கல்லூரிகள்:
டெல்லி AIIMS, மவுலான ஆஜாத் மருத்துவ கல்லூரி, ஜிப்மெர் மற்றும் BHU போன்ற மருத்துவ கல்லூர்களில், தேசிய அளவில் முதல் 500 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். குறைவான இடங்கள் மற்றும் கட்டணம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர, கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகபட்சமாக இருக்கும். தேர்வு முடிவுகளை nta.nic.in என்ற இணைய முகவரியில் மாணவர்கள் அறியலாம். முடிவுகள் வெளியான பிறகு 15% மருத்துவ இடங்கள் தேசிய இட ஒதுக்கீட்டிலும், 85% மருத்துவ இடங்கள் மாநில இடஒதுக்கீட்டிலும் பிரிக்கப்பட்டு கவுன்சிலிங் நடைபெறும்.





















