NEET UG 2024: நீட் தேர்வு ரத்து இல்லை; வேண்டுமானால் இதைச் செய்யலாம் - உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவுகள்
நீட் தேர்வு ரத்து இல்லை. ஏனெனில் நீட் இளநிலைத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் பரவலாக இல்லை. வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் மட்டுமே நடந்துள்ளது.
நீட் இளநிலைத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக ஜூலை 23ஆம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீட் மறுதேர்வு கோரிய வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கான விரிவான காரணங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறி இருந்தது.
இதுதொடர்பாக இன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ’’நீட் தேர்வு ரத்து இல்லை. ஏனெனில் நீட் இளநிலைத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் பரவலாக இல்லை. வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் மட்டுமே நடந்துள்ளது.
NEET-UG 2024: Supreme Court says there was no systemic breach of the NEET-UG 2024 papers, the leak was only limited to Patna and Hazaribagh. pic.twitter.com/MG5p0myABJ
— ANI (@ANI) August 2, 2024
வினாத்தாள் கசிவைத் தடுக்க உயர், நவீனத் தொழில்நுட்பங்கள்
- முறைகேடுகளைத் தடுக்க, அனைத்துத் தேர்வு மையங்களிலும் சிசிடிவி மையங்களைப் பொருத்த வேண்டும்.
- தேர்வு முறையில் உள்ள பலவீனத்தைக் கண்டறிய வேண்டும்.
- வினாத்தாள் கசிவைத் தடுக்க உயர், நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
- வினாத் தாள்களை அச்சிடவும் அனுப்பி வைக்கவும் பின்பற்றப்படும் நெறிமுறைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
- வினாத்தாள்கள், விடைத்தாள்களை திறந்தவெளி ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுப்பி வைப்பதற்கு பதில், மூடப்பட்ட, பூட்டுகளைக் கொண்ட வண்டிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.
- தேர்வர்களின் ஆள் மாறாட்டங்களைத் தடுக்க வெவ்வேறு நிலைகளில் அடையாள சோதனையை மேம்படுத்த வேண்டும். மோசடியைத் தடுக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இதை உறுதிசெய்ய வேண்டும். தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்த ஆண்டிலேயே மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.’’
இவ்வாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.