NEET PG Result: அதிர்ச்சி.. நீட் முதுகலைதேர்வு முடிவுகள் ரத்து; வெளியான அதிரடி அறிவிப்பு- யாருக்கு, ஏன்?
NEET PG Result 2025: NBEMS தேர்வுகள் நெறிமுறைக் குழுவின்படி, 21 தேர்வர்கள் தேர்வில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டதால் அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

NEET PG Result Cancelled: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் முதுகலைத் தேர்வு முடிவுகள், 22 தேர்வர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 21 பேர் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஒருவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுமுறைகேடுகளில் ஈடுபட்ட 13 தேர்வர்களின் தகுதியும், தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல நீட் முதுகலை 2021, 2022, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களின் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் ஏன் ரத்து செய்யப்பட்டன?
NBEMS தேர்வுகள் நெறிமுறைக் குழுவின்படி, 21 தேர்வர்கள் தேர்வில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டதால் அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல 2025ஆம் ஆண்டு செஷனைச் சேர்ந்த ஒரு தேர்வரின் முடிவுகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வர்களின் மதிப்பெண் அட்டைகள் இப்போது செல்லாதவை என்றும், வேலைவாய்ப்பு, முதுகலைச் சேர்க்கை அல்லது உயர்கல்வி நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
நீட் முதுகலை கலந்தாய்வு தேதிகள்
அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) தனது எக்ஸ் பக்கத்தில், ’’மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் (MoHFW) நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நீட் முதுகலை 2025 கலந்தாய்வு அக்டோபர் மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக’’ தெரிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழக இடங்களை நிர்ணயிக்கும் இந்த செயல்முறை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தேர்வு நடந்தது எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று, நாடு முழுவதும் 301 நகரங்களில் 1,052 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 2.42 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முறைகேட்டில் ஈடுபட்டு, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்ட தேர்வர்களின் விவரம் அறிய: https://natboard.edu.in/viewUpload?xyz=d3FpellkZk5lWnltdkNrVGpGNFhTQT09























