NEET, JEE Special Coaching: நீட், ஜேஇஇ சிறப்புப் பயிற்சி: 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க மொத்தம் 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க மொத்தம் 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நீட் தேர்வுக்கு 46,216 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல ஜேஇஇ (JEE) தேர்வுக்கு 29,279 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த வகையிலும் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது
முன்னதாக இதற்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொழிற்கல்வி இணை இயக்குநர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தார். அதில், முன்கூட்டியே திட்டமிட்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில் வட்டார அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 1.30 மணி நேரம், குறிப்பாக 4 முதல் 5.30 மணி வரை பாடவாரியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வார நாட்களில் பயிற்சி
பள்ளிகளிலேயே இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் கீழ்க்காணும் அட்டவணையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நீட் / ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்து இருந்தார்.
திங்கள் - தாவரவியல் / கணிதம்
செவ்வாய் - இயற்பியல்
புதன் - விலங்கியல் / கணிதம்
வியாழன் - வேதியியல்
வெள்ளி - மீள்பார்வை / சிறு தேர்வு
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு 46,216 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல ஜேஇஇ (JEE) தேர்வுக்கு 29,279 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 1,07,225 பேர் தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பித்து , படித்து வருகின்றனர். இரண்டு தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக அமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தின விழா இன்று (நவம்பர் 14) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.