NEET 2024: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி!- எப்படி? இதோ வழிகாட்டி!
NEET Exam 2024 registration: நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசித் தேதி ஆகும்.
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசித் தேதி ஆகும்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சுருக்கமாக நீட் தேர்வு) என அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி மதியம் 2 முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி அன்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், மார்ச் 9 கடைசித் தேதியாக இருந்தது. பிறகு மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று இரவு 10.50 மணி வரை தேர்வர்கள் வின்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் மட்டுமே தேர்வு
கடந்த ஆண்டு வெளிநாட்டு தேர்வு மையங்களிலும் தேர்வு நடந்த நிலையில், இந்த முறை இந்தியாவுக்குள் மட்டுமே தேர்வு நடைபெற உள்ளது. எனினும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
* முதல்முறை விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://neet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
* அதேபோல சரியான இ – மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும். அவையே வருங்காலத்தில் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
* முன்பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, கைரேகை ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* முதல் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பிறகே விண்ணப்பப் படிவத்தை உறுதிசெய்ய வேண்டும். சரியான தகவல்களை மட்டுமே தேர்வர்கள் உள்ளிட வேண்டியது முக்கியம்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணுங்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91-11-40759000
இ – மெயில் முகவரி: neet@nta.ac.in
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/