National Education Day: யாராலும் பறிக்க முடியா சொத்து- இன்று தேசிய கல்வி தினம்: ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது?
National Education Day 2024: நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியம்.
கல்வி தினம் எப்போது? ஏன்?
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், நினைவுகூரத்தக்க கல்வியாளருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சிறப்பு பேச்சு, கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள், விருது வழங்கல் ஆகியவற்றைக் கொண்டாடும் நாளாகவே தேசிய கல்வி தினம் சிறப்பிக்கப்படுகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியம். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் தேசத்தை முன்னேற்றத்தை நோக்கி இயக்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.
கல்வி மூலம் இந்தியாவை மாற்றுதல்
பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் மூலம் கற்றலை மேம்படுத்த இந்திய அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ளது.
என்னென்ன சிறப்புத் திட்டங்கள்?
அரசியலமைப்பின் 86வது திருத்தத்தின் 21-ஏ பிரிவு மூலம் இலவச ஆரம்பக் கல்வியின் அறிமுகம், ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. ஏப்ரல் 1, 2010 முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், முறையான பள்ளியில் தரமான தொடக்கக் கல்வியை ஒவ்வொரு குழந்தையும் பெறுவதை உறுதி செய்கிறது.
அதேபோல மத்திய அமைச்சரவை ஜூலை 29, 2020 அன்று தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைக்க முயல்கிறது. எனினும் இதில் சிற சிறப்புக் கூறுகள் சர்ச்சையை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 7, 2022 அன்று பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த முயற்சி இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களிடையே தரமான கல்வி, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்க்கும். மொத்தம் ரூ.27,360 கோடி திட்ட செலவுடன், இது ஐந்து ஆண்டு காலம் (2022-2027) செயல்படுத்தப்படும். இதற்காக மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாகும்.
கேந்திரிய வித்யாலயாக்களுக்கு ரூ. 9,302 கோடியும், நவோதயா வித்யாலயாக்களுக்கு ரூ. 5,800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கணிசமான முதலீடு இந்தியாவின் கல்வி முறையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விதான் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறியும். எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். அதை மனதில்கொண்டு அரசுகள் செயல்படுவதே இந்த தினத்துக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும்.