Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டத்தின் அம்சங்கள் என்ன? : ஆக.29-ல் அனைத்துக் கல்லூரி முதல்வர்களையும் சந்திக்கும் முதலமைச்சர்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
'உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற குறிக்கோளைக் கொண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தத் திட்டம் என்னுடைய கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
'நான் முதல்வன்' திட்டம்
மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பிற தகவல்களும் உண்டு.
இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in/home என்ற இணையதளப் பக்கத்தில் பல்வேறு பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன.
என்ன படிக்கலாம்?
12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்று இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. தொடங்கி பி.டெக்., எம்.பி.பி.எஸ். வரை ஏராளமான படிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிப்பு குறித்த சுருக்கமான அறிமுகம், படிப்புக் காலம், அதிலேயே என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? அந்தப் படிப்பு அளிக்கும் பணி வாய்ப்புகள் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வுகள்
நுழைவுத் தேர்வுகள் குறித்த பகுதியில் கீழ்க்காணும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கொடுக்கப்பட்டுள்ளன.
* பள்ளிப் படிப்புக்குப் பிறகு என்னென்ன நுழைவுத் தேர்வுகள் உள்ளன?
* நுழைவுத் தேர்வு குறித்த அறிமுகம்
* அதை எழுதுவதற்கு என்ன கல்வித் தகுதி தேவை?
* தேர்வு முறை எப்படி இருக்கும்
* சேர்க்கைக்கான காலி இடங்கள்
* விண்ணப்பக் கட்டணம்
* விண்ணப்பிக்கும் முறை
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ உள்ளிட்ட 11 வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் அம்சங்களை அனைத்துக் கல்லூரிகளும் எடுத்துச் செல்ல உயர் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பட்டியலில் உள்ள தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொள்கின்றனர்.
நான் முதல்வன் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு: https://naanmudhalvan.tnschools.gov.in