Most Expensive Schools: ராஜாக்களின் பள்ளி; ரூ.1.26 கோடி கட்டணம்- உலகிலேயே காஸ்ட்லி ஸ்கூல் எது தெரியுமா?
Most Expensive Schools in The World: இங்கு இரவு உணவு வழங்கப்படும்போது, மாணவர்கள் முறையான உடைகளை அணிய வேண்டும். மாணவர்கள் பிளேசர் மற்றும் டை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஆண்டுக்கு 1.26 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய, ராஜாக்களின் பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய, வகுப்புக்கு 10 பேருக்குக் குறைவாக மட்டுமே படிக்கக் கூடிய உலகிலேயே விலையுயர்ந்த பள்ளி எது தெரியுமா?
ரொலே நகரத்தில் அமைந்துள்ள லீ ரோஸி என்னும் உலகப் புகழ்பெற்ற போர்டிங் பள்ளிதான் அது.
உலகின் சொகுசு நகரமான, அதிகம் செலவு வைக்கக்கூடிய இடமான சுவிட்சர்லாந்தில்தான் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. லீ ரோஸி பள்ளி சுவிட்சர்லாந்து நகரத்தில் அமைந்து இருந்தாலும், குளிர்கால கேம்பஸ் வளாகம், சாலெட் என்னும் அழகிய கிராமத்தில் செயல்படுகிறது.
ஒழுக்கத்துக்குத்தான் முக்கியத்துவம்
இந்தப் பள்ளியில் கல்வியைவிட ஒழுக்கத்துக்குத்தான் பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு இரவு உணவு வழங்கப்படும்போது, மாணவர்கள் முறையான உடைகளை அணிய வேண்டும். மாணவர்கள் பிளேசர் மற்றும் டை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
அதேபோல கல்வியோடு, விளையாட்டு, கலைகள், தொழில்நுட்பம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன. மலை பனிச்சறுக்கு, ஃபென்சிங் மற்றும் குதிரை சவாரி, ஸ்கை டைவிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உண்டு.
பன்மொழிக் கொள்கை
பன்மொழிக் கொள்கை இங்கே நடைமுறையில் உள்ளது. பள்ளி நூலகத்தில் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. இங்கு நல்ல பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுவது முக்கியம்: மாணவர்கள் தங்கள் கைகளை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டே பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிறருக்கு மதிப்பளிப்பது, சுய மரியாதை, சவால்களைச் சந்திக்கும் மன வலிமை, நட்பு, ஒற்றுமை ஆகியவையும் பள்ளி கற்பிக்கும் பிரதான அம்சங்கள். இவையே மாறிக் கொண்டே இருக்கும் உலகில், யாரையும் எதிர்பார்க்காமல் வெற்றிக் கனியைச் சுவைக்கத் தயார்படுத்தும் என்கிறது லீ ரோஸி பள்ளி.
1.26 கோடி ரூபாய் ஆண்டுக் கட்டணம்
இங்கு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.26 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்தப் பள்ளி ராஜாக்களின் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. வகுப்புக்கு 10 பேருக்குக் குறைவான நபர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான சுவிட்சர்லாந்து மக்கள், ஸ்டேட் ஸ்கூல் என்னும் அரசுப் பள்ளிகளையே படிக்கத் தேர்வு செய்கின்றனர் (95 சதவீதம் பேர்). மீதமுள்ள 5 சதவீதம் பேரும் பிற நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களும் இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர். 1880 முதல் இந்தப் பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.